என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா கண்டுபிடிப்பு- புதியவகை வைரஸ் பாதிப்பா என்று ஆய்வு
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஆலந்தூர்:
உருமாறிய கொரோனா வைரஸ் (பி.எப்.7) தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இதன் பாதிப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது.
இதே போல ஜப்பான், தைவான், தென்கொரியா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் புதியவகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடந்த 24-ந்தேதி முதல் விமான நிலையத்திலேயே மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழகத்திலும் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதிகள், மருந்து கையிருப்பு உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நேற்று உருமாறிய கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ பயிற்சி ஒத்திகையும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளில் சிலருக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியானது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவை புதிய வகை கொரோனாவா? என்பதை கண்டறிய மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு மையத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதன் முடிவு வந்த பின்னரே அவர்களுக்கு வந்திருப்பது புதிய வகை கொரோனாவா? என்பது தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய்-மகளுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு நோய் தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, "கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், தங்களை 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது" என்றனர்.






