search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒமைக்ரான் போட்ட குட்டிகள்: தமிழகத்தில் பரவியுள்ள 2 புதிய கொரோனா வைரஸ்
    X

    ஒமைக்ரான் போட்ட குட்டிகள்: தமிழகத்தில் பரவியுள்ள 2 புதிய கொரோனா வைரஸ்

    • தமிழகத்தில் ஒமைக்ரானில் இருந்து 2 வகை புதிய வைரஸ்கள் உருவாகி இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.
    • கொரோனா வைரஸ் தொற்று பற்றி கண்டுபிடிக்க வெறும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே போதுமானதல்ல.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் முற்றிலும் இல்லை என்றுதான் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் புதிது புதிதாக அவதாரம் எடுத்து அது தனது வேலையை காட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை தமிழக பொது சுகாதாரத்துறை ஆய்வில் கண்டுபிடித்து உள்ளது.

    உருமாறி உருமாறி வரும் வைரசை கண்டுபிடிப்பதற்காக மரபணு பரிசோதனை நிலையம் தமிழக அரசு சார்பில் ரூ.4 கோடி செலவில் கொரோனா காலத்தில் அமைக்கப்பட்டது.

    இதனால் புது புது வைரஸ்கள் அவ்வப்போது அடையாளம் காணப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒமைக்ரானில் இருந்து 2 வகை புதிய வைரஸ்கள் உருவாகி இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர். இது கொரோனா வைரசை போல் வீரியமிக்கது அல்ல. ரொம்ப சாதுவாகத்தான் இருக்கிறது. இது தாக்குபவர்கள் உடல்வலி, காய்ச்சல் என்று ஓரிரு நாட்கள் புரட்டி எடுத்து விடுகிறது. ஆபத்து எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    இந்த புதுவகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றி அதிகாரி கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் தொற்று பற்றி கண்டுபிடிக்க வெறும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே போதுமானதல்ல. அது எந்த வகை வைரஸ் என்பதை கண்டுபிடிக்க மரபணு பரிசோதனை அவசியம். கொரோனா நெருக்கடி காலத்தில் உடனுக்குடன் கண்டுபிடித்து கட்டுப்படுத்துவதற்காக இந்த ஆய்வகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இந்த மாதிரி ஆய்வகம் இருப்பது தமிழகத்தில் மட்டும்தான்.

    2021-ல் ஒமைக்ரான் வகை வைரஸ் பரவியதை கண்டுபிடித்தது. நைஜீரிய நாட்டு பயணியிடம் இருந்து நமது நாட்டுக்குள் வந்தது உறுதி செய்யப்பட்டது.

    வெளிநாடுகளில் மட்டும்தான் இந்த வகை இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில் 'கிளஸ்டர்' உருவானது. அதை கண்டுபிடித்ததால் வேகமாக கட்டுப்படுத்த முடிந்தது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எக்ஸ்.பி.பி. என்ற வகை வைரசை கண்டுபிடித்தோம். இது இரண்டு வகையான ஒமைக்ரான் வைரஸ் சேர்ந்து உருவாவது.

    எனவே இது வீரியம் மிகுந்ததாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் வரை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. இந்த வகை வைரஸ் தாக்கியதில் 2 மற்றும் 3 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 81 சதவீதம் பேர். எனவே நாம் எடுத்துக் கொண்ட கொரோனா தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தியின் வீரியம் குறைந்து இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது.

    இன்புளூயன்சா வந்த பிறகு அது முற்றிலுமாக ஒழியவில்லை. பருவ காலங்களில் வரத்தான் செய்கிறது. எனவே வெளிநாடுகளில் அதில் இருந்து தப்பிக்க தடுப்பூசி கண்டுபிடித்து செலுத்திக் கொள்கிறார்கள்.

    அதே போல் இனி கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகள் தயாரிக்கும் போது தற்போது எந்த வகை வைரஸ் சுற்றிக் கொண்டிருக்கிறதோ அதில் இருந்து தயாரிக்க வேண்டும்.

    இந்த மாதிரி அடுத்தகட்ட ஆய்வுக்கு நாம் கண்டுபிடித்து இருக்கும் வைரஸ் மற்றும் அது தொடர்பான தரவுகள் கைகொடுக்கும் என்றார்.

    தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை உலக அளவில் பிரபலமான 'லான்செட்' மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×