search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு-  பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    X

    திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு- பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    • திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை உட்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.
    • திமுக தலைவராக தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 5 ஆண்டுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை நடத்தி தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும்.

    அதன்படி தி.மு.க.வில் கடந்த 6 மாதங்களாக உள்கட்சி தேர்தல் நடந்து வந்தது. இதில் கிளை கழக நிர்வாகிகள் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு பேரூர் வாரியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

    இதன் பிறகு ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர்கள், மாநகர, மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க பொதுக்குழு கூட்டம் இன்று காலையில் சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.

    இந்த பொதுக்குழுவில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 4100 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அரங்கத்துக்கு வந்து அமர்ந்திருந்தனர். புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, அந்தமான் பகுதியை சேர்ந்த நிர்வாகிகளும் பொதுக்குழுவில் பங்கேற்றனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 மணியளவில் பொதுக்குழுவுக்கு வந்தார். அவர் வந்தபோது தொண்டர்கள் ஆரவாரம் செய்து தலைவர் வாழ்க என முழக்கமிட்டனர்.

    அவர் வந்ததும் பொதுக்குழு காலை 10.15 மணிக்கு கூடியது. பொதுக்குழுவில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வு முதலில் நடைபெற்றது.

    ஏற்கனவே இந்த பதவிகளுக்கு வேட்பு மனுக்கள் தலைமை கழகத்தில் நேற்று முன்தினம் (7-ந்தேதி) பெறப்பட்டிருந்தது. இதில் கட்சி தலைவர் பொறுப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

    அவரது பெயரில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

    இதே போல் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு துரை முருகனும், பொருளாளர் பொறுப்புக்கு டி.ஆர். பாலுவும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 4 தணிக்கை குழு உறுப்பினர் பதவிகளுக்கும் நிர்வாகிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலையில் கூடிய பொதுக்குழுவில் தேர்தல் முடிவை அறிவிப்பதற்கான நிகழ்ச்சி முதலில் நடை பெற்றது.

    இதற்காக தேர்தல் நடத்தும் ஆணையரான முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியை தலைமை கழகம் நியமித்தி ருந்தது. அவர் மேடைக்கு வந்து அமர்ந்து தேர்தல் முடிவை அறிவித்தார்.

    அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டார். கழகத்தின் 15-வது பொதுக்குழு தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பை கேட்டதும் பொதுக்குழு உறுப்பினர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

    தலைவர் தளபதி வாழ்க என்று முழக்கமிட்டனர். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை மேடைக்கு வந்து அமருமாறு ஆற்காடு வீராசாமி அழைப்பு விடுத்தார். அவர் மேடைக்கு வந்ததும் தலைமை கழக நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர்.

    இதைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதையடுத்து அவர்களும் மேடைக்கு வந்தனர். அவர்களுக்கு தலைமை கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    பின்னர் 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழு தமக்கு வழங்கிய சிறப்பு அதிகாரம், உரிமையின் அடிப்படையில் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர்களை நியமனம் செய்தார்.

    இதன் பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை தி.மு.க. முன்னோடிகள் வாழ்த்தி பேசினார்கள். இறுதியில் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    2-வது முறையாக தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் பேச ஆரம்பிக்கும் போது பொதுக்குழு உறுப்பினர்கள் தளபதி வாழ்க என்று மீண்டும் முழக்கமிட்டனர். அவரது பேச்சை ஆர்வமுடன் கேட்டனர். அவர் பேசி முடித்ததும் தளபதி வாழ்க என்று மீண்டும் முழக்கமிட்டனர்.

    பொதுக்குழுவில் 4100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் அவர்களுக்கு சைவ-அசைவ உணவுகள் வழங்கப்பட்டது. இதற்காக 2 தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    தி.மு.க. பொதுக்குழுவை காண்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Next Story
    ×