என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாமன்-மச்சான் உறவு வலுப்பெற வழுக்கு மர போட்டி
- மாமன் உறவு முறை கொண்டவர்கள் வழுக்கு மரத்தை ஊன்றி அதன் உச்சியில் பூச்சரத்தை கட்டி வைத்தனர்.
- மாமன், மைத்துனர் உறவு என்பது எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்தும் விதமாக இது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிபட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில் குறிப்பாக உறவு மேம்பட நடந்த வழுக்கு மரப்போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மாமன் உறவு முறை கொண்டவர்கள் வழுக்கு மரத்தை ஊன்றி அதன் உச்சியில் பூச்சரத்தை கட்டி வைத்தனர். இதனை மைத்துனர் உறவு கொண்ட வாலிபர்கள் ஏறி தொட்டால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசாக அறிவித்தனர்.
இதற்காக 65 பேர் தேர்வு செய்யப்பட்டு விழாக்குழுவில் தங்கள் பெயரை பதிவு செய்திருந்தனர். மைத்துனர்கள் வழுக்கு மரத்தில் ஏற முயன்றபோது அதனை மாமன்கள் தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் பலமுறை வழுக்கி விழுந்தபோதும் பலர் உச்சிக்கு சென்று பூச்சரத்தை எடுத்து பரிசுத்தொகையை பெற்றனர்.
மரத்தில் ஏறும் வாலிபர்களுக்கு உதவியாக கிராமப்புற இளைஞர்களும் உதவ, கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். வெற்றி பெற்ற மைத்துனர்களுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிவிக்கப்பட்டு பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் வழுக்கு மர போட்டியில் மாமன், மைத்துனர்கள் கலந்து கொள்ளும் பந்தயம் மிகவும் சுவாரசியமானது. இதற்காக வெளியூர்களில் இருந்தாலும் இந்த போட்டியில் பங்கேற்க வந்துவிடுவார்கள்.
இதற்காக குடும்பத்தினர் மட்டுமின்றி கிராம மக்கள் ஒன்றுமையுடன் இந்த போட்டியை காணும்போது தங்கள் குடும்பத்தில் உள்ளவரையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அதன்படி அடுத்த ஆண்டு அவர்களும் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள். மாமன், மைத்துனர் உறவு என்பது எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்தும் விதமாக இது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.






