என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழக வளங்களை அபகரிக்கும் கேரளா: கைகட்டி வேடிக்கை பார்ப்பதா?- சீமான் கண்டனம்
- களவு போகும் தமிழ்நாட்டு எல்லைப்பகுதியை காத்திடாமல், கைகட்டி வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
- கேரளா- தமிழ்நாடு எல்லைப்பகுதியில் முறையாக அளவீடுகளை மேற்கொண்டு விரைந்து எல்லை வரையறை செய்து முடிக்க வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களின் பல்லாயிரக்கணக்கான நிலங்களை மின்னணு நில அளவை என்ற பெயரில் கேரள எல்லைக்குள் சேர்க்கும் கேரள மாநில அரசின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. களவு போகும் தமிழ்நாட்டு எல்லைப்பகுதியை காத்திடாமல், கைகட்டி வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
கேரளாவின் முறைகேடான அபகரிப்புகளால் நிலங்களையும், வளங்களையும் தமிழகம் இழப்பதோடு மட்டுமின்றி, முல்லைப் பெரியாறு சிக்கலைப் போன்று பல ஆற்றுநீர் சிக்கல்களை வருங்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் என்றும் தமிழக அரசினை எச்சரிக்கிறேன்.
ஆகவே, இனியாவது மின்னணு மறு நில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளை அபகரிக்க நினைக்கும் கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது. கேரளா- தமிழ்நாடு எல்லைப்பகுதியில் முறையாக அளவீடுகளை மேற்கொண்டு விரைந்து எல்லை வரையறை செய்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






