என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொடுமுடி அருகே அரசு பள்ளி ஆசிரியை விபத்தில் பலி
- காசிபாளையத்தில் வசித்து வரும் ஒருவர் கொடுமுடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சந்திராவை கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கொடுமுடி:
கொடுமுடி ஏமகண்டனூரை சேர்ந்தவர் சந்திரா (56). இவர் கொடுமுடியை அடுத்துள்ள காசிபாளையம் ஆரம்ப பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். தினந்தோறும் தான் பணிபுரிந்து வரும் பள்ளிக்கு பஸ்சில் சென்று விட்டு வீடு திரும்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற சந்திரா பள்ளி முடிந்த பின்னர் தனது வீட்டிற்கு திரும்பி வருவதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வழக்கமாக வரும் பஸ்கள் காரணாம்பாளையம் என்ற இடத்தில் நடந்து வரும் பாலம் வேலை காரணமாக பல ஊர்களை சுற்றிக்கொண்டு வருவதை அறிந்துள்ளார்.
அப்போது காசிபாளையத்தில் வசித்து வரும் ஒருவர் கொடுமுடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த சந்திராவை கொடுமுடியில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்றார்.
கொடுமுடி அருகே எல்லையூரை அடைந்தபோது சந்திராவின் சேலை மோட்டார் சைக்கிளில் பின்புற சக்கரத்தில் சிக்கியதால் வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் சந்திரா ரோட்டில் தலைகுப்புற விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சந்திராவை கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்திரா சிகிச்சை பயனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






