search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
    X

    தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

    • ஓ.பி. ரவீந்திர நாத்தின் தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் அவா் சொத்து விவரங்களை வெளிப்படுத்தவில்லை என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
    • நாங்கள் தாக்கல் செய்த மனுவானது எதிா்மனுதாரரை எம்.பி. பதவியில் இருந்து நீக்கக் கோருவது தொடா்புடையதாகும் என்று வழக்கறிஞர் வாதிட்டாா்.

    சென்னை:

    தேனி தொகுதியில் அ.தி.மு.க. சாா்பில் போட்டியிட்டபோது ஓ.பி.ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளிக்காமல் மறைத்து விட்டதாகவும், அவா் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியும் தேனி தொகுதி வாக்காளா் மிலானி, சென்னை ஐகோர்ட்டில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

    'இந்தத் தோ்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே, வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது' என ரவீந்திரநாத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் கடந்த ஜூலை 6-ந்தேதி அளித்த தீா்ப்பில், '2019-ம் ஆண்டு நடந்த தோ்தலில் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது' என்று உத்தரவிட்டிருந்தாா்.

    இத்தீா்ப்பை எதிா்த்து ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 4-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை ஐகோர்ட் அளித்த தீா்ப்புக்கு தற்காலிகமாகத் தடை விதித்தது.

    அவா் தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை அனுமதித்த சுப்ரீம் கோர்ட், வழக்கில் தொடா்புடைய எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருந்தது.

    இந்த நிலையில், தேனி தொகுதி தோ்தலில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் என்பவா் ஓ.பி.ரவீந்திர நாத்தை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனியாக முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

    அதில், ஓ.பி. ரவீந்திர நாத்தின் தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் அவா் சொத்து விவரங்களை வெளிப்படுத்தவில்லை என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அது முறைகேடு தொடா்புடையது என்பதால் அவரை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தோ்தல் வழக்குத் தொடராத நிலையில், முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய தகுதி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினா்.

    அதற்கு மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் வைரவன் வாதிடுகையில், மனுதாரா் சம்பந்தப்பட்ட தொகுதியில் போட்டியிட்டவா். அவா் இந்த மனுவைத் தாக்கல் செய்ய தகுதியுள்ளது. மேலும், அந்த வழக்கைப் பொருத்தமட்டில் அது தோ்தல் வெற்றியைத் எதிா்த்து தொடரப்பட்ட வழக்காகும். ஆனால், நாங்கள் தாக்கல் செய்த மனுவானது எதிா்மனுதாரரை எம்.பி. பதவியில் இருந்து நீக்கக் கோருவது தொடா்புடையதாகும் என்று வாதிட்டாா்.

    இதையடுத்து, இந்த மனுவை ஏற்கனவே இதே விவகாரத்தில் நிலுவையில் உள்ள மனுவுடன் சோ்க்கவும், மனு மீது பதில் அளிக்க ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்ட எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×