search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக கவர்னர் அரசியல் செய்கிறார்- ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
    X

    தமிழக கவர்னர் அரசியல் செய்கிறார்- ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

    • சைலேந்திரபாபு போலீஸ்துறையில் எந்தவிதமான சர்ச்சைகளும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றியவர்.
    • பாராளுமன்ற தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆட்சி மாற்றம் வரும்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு (டி.என்.பி.எஸ்.சி.) சைலேந்திரபாபுவின் பெயரை பரிந்துரை செய்து அரசு சார்பில் கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவதுதான் முறையாக இருக்கும். ஆனால் திட்டமிட்டு மறுப்பதற்குரிய உள்நோக்கம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும். அரசு உயர் பதவிகளில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும் என்ற வகையில் கருணாநிதி செயல்பட்டார். அதே நோக்கத்துடன் இன்றைக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவராக எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் இதுவரையில் தேர்ந்தெடுக்கப்படவில்லையோ, அந்த சமுதாயத்தை சேர்ந்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து கவர்னருக்கு பரிந்துரை அனுப்பி இருந்தார்.

    சைலேந்திரபாபு போலீஸ்துறையில் எந்தவிதமான சர்ச்சைகளும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றியவர். ஆனால் கவர்னர் அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரது பெயரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். டி.என்.பி.எஸ்.சி.யில் கடந்த காலங்களில் பல முறைகேடுகள் நடந்திருக்கிறது. சுப்ரீம்கோர்ட்டு வரை சென்று அந்த தவறுகள் எல்லாம் நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே வருங்காலங்களில் அப்படி இருக்க கூடாது என்பதற்காகதான் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை தமிழ்நாடு அரசு பெருந்தன்மையுடன் நியமித்து அனுப்பியது. ஆனால் இதை கவர்னர் புறக்கணித்திருப்பது கண்டனத்துக்குரியது.

    சென்னை தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். கவர்னர் 'மெட்ராஸ் டே' என்று பதிவு போடுகிறார். அவர், தமிழ்நாட்டு மக்களை சீண்டி பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறார். அவருடைய இந்த செயலை தமிழக மக்கள் தாங்கி கொள்ள மாட்டார்கள். சகித்துக்கொள்ள மாட்டார்கள். இதற்குரிய விலையை கவர்னர் ஆர்.என்.ரவி தர வேண்டியிருக்கும்.

    டி.என்.பி.எஸ்.சி. பதவி நியமனம் தொடர்பாக கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு எல்லாம் பதிலளித்து ஒரு மாதமாகி விட்டது. சைலேந்திரபாபு அரசியல்வாதி அல்ல. ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க.வினரை டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமித்தார். எங்கள் கட்சியிலும் பல அனுபவசாலிகள், வக்கீல்கள் இருக்கிறார்கள். எனினும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் இந்த பதவிக்கு நியமிக்கப்படவில்லை.

    வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் நாடார் சமுதாயத்தினர் இதுவரையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக வந்தது இல்லை. எனவே நாடார் சமுதாயத்தை சேர்ந்தவரை சமூக நீதி நோக்கத்தோடு இந்த பதவியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதை நாங்கள் சாதி கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை. இதுவரை இந்த பதவிக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத சமுதாயத்துக்கு கொடுத்திருக்கிறோம். இதனை கவர்னர் வரவேற்று இருக்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆட்சி மாற்றம் வரும். அப்போது கவர்னர் தானாகவே ஓடி விடுவார். தற்போது தி.மு.க. ரொம்ப மென்மையான இருக்கிறது. எங்கள் தலைவர் அனுமதித்தால் பழைய தி.மு.க.வாக மாறுவோம். அப்படி மாறக்கூடியவர்கள் தி.மு.க.வில் இருக்கிறார்கள். அவர்களை தலைவர் (மு.க.ஸ்டாலின்) கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். சீண்டி பார்த்தால் நிச்சயம் தி.மு.க. பழைய உருவத்தை எடுக்க வேண்டிய நிலைமை வரும். அ.தி.மு.க.வை நாங்கள் அழிக்க மாட்டோம். அவர்கள் எங்கள் பங்காளி. நாங்கள் எல்லாம் ஒரே பிராண்ட் தான். அவர்கள் வருங்காலங்களில் எங்களுடன் வந்து இணைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×