search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 40 கிராம மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம்
    X

    கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 40 கிராம மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம்

    • சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர்.
    • சுமார் 600-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    ராயபுரம்:

    எண்ணூரை சுற்றி உள்ள காட்டுக்குப்பம், சின்ன குப்பம், பெரியகுப்பம், முகத்துவார குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் எண்ணூர் குப்பம் சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமமக்கள் கொசத்தலை ஆற்றில் படகுகளில் மீன் பிடித்து வருகின்றனர். அப்பகுதி மீனவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இது உள்ளது.

    இந்நிலையில் வட சென்னை அனல்மின் நிலையத்தில் 3-வது நிலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. இதற்காக இடையஞ்சாவடி வரை 20 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கொசஸ்தலை ஆற்றில் உயர் அழுத்த மின்கோபுரம் வழியாக இரண்டு மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் ஒன்று முடிவடைந்த நிலையில் மற்றொன்று அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக கொசஸ்தலை ஆற்றில் மணல் கொட்டப்பட்டு உள்ளது. இதற்கு எண்ணூரை சுற்றி உள்ள மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். படகில் சென்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை எண்ணுர், தாழங்குப்பம் உள்ளிட்ட சுற்றி உள்ள 40 மீனவ கிராமமக்கள் இன்று மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எண்ணூர் மீனவ மக்கள் நலசங்கம் சார்பில் நெட்டுக்குப்பம் தலைவர் ராஜி தலைமையில் தாழங்குப்பம் பகுதியில் குவிந்தனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர்.

    மீனவ கிராமக்கள் அனைவரும் தாழங்குப்பத்தில் இருந்து எண்ணூர் கத்திவாக்கத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அங்கு மேடை போடப்பட்டு இருந்தது.

    கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைப்பதால் மீன்வளம் பாதித்து தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆவதாக மீனவர்கள் குற்றம் சாட்டி பேசினர்.

    ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்கும் பணி சிறிது தூரத்திலேயே உள்ளது. இதைத்தொடர்ந்து மீன்வ கிராமமக்கள் அந்த பகுதிக்கு செல்லாத வகையில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுமார் 600-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மீனவகிராமங்கள் போராட்டத்தை அடுத்து தாழங்குப்பத்தில் இருந்து எண்ணூர் வரை வியாபாரிகள் கடைகளை அடைத்து இருந்தனர். எண்ணூர் மீனவர்களுக்கு ஆதரவாக மற்ற மீனவ கிராமமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து காட்டுக்குப்பத்தை சேர்ந்த மீனவர் கருணாகரன் கூறியதாவது:- வடசென்னை அனல் மின்நிலைய விரிவாக்க பணி தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் போது மீனவர்களிடம் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு காட்டிய வரைபடத்தின் படி அமைக்கப்படவில்லை. கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்கப்படுவதால் மீன் பீடி தொழில் பாதிக்கப்படும். மீன் இனப்பெருக்க வளமும் பாதிக்கும். நீரோட்டம் தடைபடும்.

    கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்பட்ட கற்களை அகற்றவும், தூர்வாரவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு தரவும் எண்ணூர் உள்ளிட்ட 8 கிராம மீனவர்களுக்கு ஆதரவாக பழவேற்காடு மற்றும் திருவான்மியூர் பகுதியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதில் சரியான நடவடிக்கை இல்லையென்றால் தமிழகம் முழுவதும் மீனவ கிராமங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×