search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருமத்தம்பட்டியில் இன்று மாலை கிறிஸ்தவ மாநாடு: எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர் வைக்க அனுமதி மறுப்பு
    X

    கருமத்தம்பட்டியில் இன்று மாலை கிறிஸ்தவ மாநாடு: எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர் வைக்க அனுமதி மறுப்பு

    • அ.தி.மு.க.வினர் வைத்த பேனர்களை போலீசார் அகற்றும் பணியில் ஈடுபடுவதாக அ.தி.மு.க.வினருக்கு தகவல் வந்தது.
    • தி.மு.க. பேனர்கள் வைப்பதற்கு அனுமதிக்கும் போலீஸ், எதிர்க்கட்சியினர் வைத்தால் மட்டும் அகற்ற சொல்வது ஏன் என போலீசாரிடம் கேள்வி எழுப்பினார்.

    கருமத்தம்பட்டி:

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் மாநாடு மற்றும் முப்பெரும் விழா இன்று மாலை நடக்கிறது.

    இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

    மாநாட்டில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று கிறிஸ்தவ கூட்டமைப்பு மற்றும் அ.தி.மு.க. சார்பில் அவினாசி சாலையில் பேனர்கள், பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நேற்றிரவு, அ.தி.மு.க.வினர் வைத்த பேனர்களை போலீசார் அகற்றும் பணியில் ஈடுபடுவதாக அ.தி.மு.க.வினருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து அங்கு ஏராளமான அ.தி.மு.க.வினர் மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பினர் கருமத்தம்பட்டி நால்ரோட்டில் திரண்டனர். அவர்கள் பேனர்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    இதற்கிடையே மாநாட்டு பந்தலை பார்வையிடுவதற்காக வந்திருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பேனர்கள் அகற்றப்பட்ட தகவல் அறிந்ததும், அங்கு சென்று, நிர்வாகிகளை சமாதானப்படுத்தி போலீசாருடன் பேசினார்.

    தி.மு.க. பேனர்கள் வைப்பதற்கு அனுமதிக்கும் போலீஸ், எதிர்க்கட்சியினர் வைத்தால் மட்டும் அகற்ற சொல்வது ஏன் என போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    பின்னர் பொது இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றி விடுமாறும், தனியார் இடத்தில் வைக்கப்பட்ட பேனர்கள் மட்டும் இருக்கட்டும் என அ.தி.மு.க.வினரிடம் கூறி விட்டு போலீசார் அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து தொண்டர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மேசாத் ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிறிஸ்தவ மாநாட்டுக்கு பேனர் வைக்க போலீசார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிற கட்சி நிகழ்வுகளின்போது பேனர் வைக்க அனுமதித்த போலீசார், சிறுபான்மை சமூகத்தினரின் நிகழ்வுக்கு பேனர் வைக்க திட்டமிட்டு அனுமதி மறுக்கின்றனர்.

    எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எங்களது கோரிக்கைகளை தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் தற்போது அதனை அரசியலாக்க முயற்சித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×