search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை: சென்னையில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி தீவிரம்
    X

    வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை: சென்னையில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி தீவிரம்

    • நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் ரூ.20 கோடி செலவில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
    • 2 வாரத்தில் பணிகளை முடிக்க இலக்கு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் இறுதிவரை வழக்கமாக பெய்யும். இக்காலக் கட்டத்தில் தமிழகத்துக்கு தேவையான அளவு மழை பொழிவு இருக்கும்.

    பருவ மழை காலம் நெருங்கி வருவதால் கால்வாய்கள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை தீவிரப்படுத்தி வருகிறது.

    சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு போன்று மீண்டும் ஏற்படாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் ரூ.20 கோடி செலவில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. நீர் வழிகளில் தடையின்றி வெள்ள நீரை கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக நீர் வளத்துறை கிட்டத்தட்ட 30 சதவீத பணிகளை முடித்து உள்ளது. 2 வாரத்தில் பணிகளை முடிக்க இலக்கு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போரூர், செங்குன்றம், சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணி தொடங்கி நீர்வாழ்களை களை அழிக்கும் பணி நடந்து வருகிறது. 184.45 கி.மீ. தொலைவுக்கு செல்லும் கால்வாய்களில் 77 பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

    அடையாறு ஆற்று முகத் துவாரம் மற்றும் முட்டுக் காடு, புதுப்பட்டினம் கடல் முகத்துவாரங்களில் குவிந்துள்ள மணல் அகற்றப்படுகிறது. கண்டலேறு-பூண்டி வாய்க்கால் முற்றத்தின் அரிக்கப்பட்ட கரைகளை மூடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிருஷ்ணா நீர் பூண்டி நீர்த் தேக்கத்திற்கு செல்கிறது.

    பருவமழையை கருத்தில் கொண்டு நீர் வழிகளில் உள்ள செடிகள், கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை 137 எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விருகம்பாக்கம்-அரும்பாக்கம் கால்வாயில் உள்ள குப்பைகளை 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது அதிகாரிகள் அகற்ற வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. ஆங்காங்கே தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கூவம் பகுதிகளிலும், குறுகிய பகுதிகளிலும் துப்புரவு பணியை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.

    விருகம்பாக்கம், அரும்பாக்கம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நுல்லா பகுதியில் சென்னை மாநகராட்சி உதவியுடன் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 72 லாரிகளில் காய்கறி கழிவுகள் அகற்றப்பட்டன. இந்த பணியை கண்காணிக்க என்ஜினியர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட செடிகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது.

    அகற்றப்பட்ட செடிகள், மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும் அதேவேளையில் அழிக்கப்பட்ட தாவரங்களை உரமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    Next Story
    ×