search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் இல்லை- அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்
    X

    டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் இல்லை- அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்

    • கள்ளச்சாராயத்தை நோக்கி யாரும் சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் அரசுக்கு இல்லை.
    • டாஸ்மாக் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டாஸ்மாக் கடைகளை வழக்கத்தைவிட முன்கூட்டியே திறப்பதற்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக கூறியிருந்தேன். இதுசம்பந்தமாக நான் கூறிய கருத்தின் முழு பகுதியையும் கவனிக்காமல், அதிலுள்ள ஒரு சில பகுதியை மட்டும் கேட்டு சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

    நான் திட்டவட்டமாக சொல்வது என்னவென்றால், டாஸ்மாக் கடைகளுக்கான நேரத்தை மாற்றுவதற்கான எண்ணம் அரசுக்கு இல்லை. இப்போதுள்ளபடி பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணிவரைதான் இயங்கும். அதில் மாற்றம் எதுவும் இல்லை.

    டாஸ்மாக் மது விற்பனையில் உள்ள சில சிக்கல்களை ஒதுக்கித்தள்ள முடியவில்லை. மற்ற நேரத்தில் தவறான இடத்தில் மது வாங்குவதை தவிர்த்துவிட்டு, டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கடை நேரத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கி உள்ளோம்.

    மது பாட்டில்களை வெளியே போட்டுச் செல்வது உள்பட பல பிரச்சினைகள் உள்ளன. அவை தொடர்பாக தொழிற்சங்கங்கள் உள்பட பல தரப்பினரும் பேசுகிறோம். அரசின் கொள்கைக்கு முரணானவற்றை ஒதுக்கிவிட்டு மற்ற கருத்துகள் பற்றி ஆய்வு செய்கிறோம். மற்ற மாநிலங்களுடனும் ஒப்பிட்டு பார்த்து வருகிறோம். 'டெட்ரா பேக்' குடுவைகளுக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    90 மி.லி. 'மினி குவார்ட்டர்' மது விற்பனை செய்தால், குறைவான பணம் வைத்திருப்பவரும் அதை வாங்கி அருந்த வாய்ப்பு ஏற்படுமே என்று கேட்டால், இதுசம்பந்தமாக அனைத்து தரப்பினரின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்க இருக்கிறோம். 90 மி.லி. அளவில் மதுவை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விருப்பம் அல்ல.

    ஆனால் அளவுக்கு அதிகமாக (90 மி.லி.க்கு மேல்) சிலர் மது அருந்தும் தவறுகளும் நடக்கிறது. அந்த கோணத்தில் சிந்தித்தோம். ஆனால் அது வேறு விளைவுகளை ஏற்படுத்துவதான சூழ்நிலை வந்தால் அதை கைவிட்டுவிடுவோம்.

    கல்வி நிறுவனங்கள், கோவில் அருகில் உள்ள மதுக்கடைகள் பற்றி மீண்டும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதுபோன்ற கடைகளை கண்டறிந்து மூடி விடுவோம். மூடப்பட்டுள்ள கடைகளின் முன்னாள் வாடிக்கையாளர்கள் போதைக்காக தவறான இடங்களுக்கு சென்றுவிடக்கூடாது என்பதுதான் அரசின் எண்ணம். அதற்கு வாய்ப்பு அளித்துவிடக்கூடாது. 24 மணி நேரமும் மது தொடர்பாகவே அதிகாரிகள், போலீசார் கவனித்துக் கொண்டிருக்க முடியாது.

    கள்ளச்சாராயத்தை நோக்கி யாரும் சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் அரசுக்கு இல்லை. மது என்பது மக்களிடையே மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயமாக இருப்பதால் இப்படியோ அல்லது அப்படியோ போக முடியவில்லை. எனவே இதில் அனைவரையும் வைத்து பேசி முடிவு எடுக்க உள்ளோம்.

    பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கும் பிரச்சினை இன்னும் தொடர்கிறதா? என்று கேட்டால், சில இடங்களில் அப்படி நடந்தது பெரிதாக்கப்பட்டு விட்டது. இப்போதுகூட இரண்டொரு இடங்களில் நடக்கிறது. 100 சதவீதம் இல்லை என்று சொல்ல மாட்டேன்.

    அங்கும் நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். இந்த பிரச்சினை கட்டுப்படுத்தப்படும். சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் சம்பந்தப்பட்டவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    டாஸ்மாக் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அவற்றை தீர்க்க தொழிற்சங்கங்களுடன் பேசி இருக்கிறோம். இதில் என்னென்ன நிவாரணம் செய்யப்படலாம் என்பது பற்றிய அறிவுரைகளை அதிகாரிகள் அளித்துள்ளனர். இன்னும் 10 நாட்களில் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுவால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே டாஸ்மாக் கடையிலேயே ஏற்படுத்த இருக்கிறோம். கடையின் கண்காணிப்பாளருக்கும், விற்பனையாளருக்கும் இதுசம்பந்தமான சுற்றறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த கேமரா மூலம் சென்னையில் இருந்தபடியே அதிகாரிகள், கடையை கண்காணிக்கலாம். உள்ளூர் போலீசும் கண்காணிப்பார்கள். கடையின் அளவு மிகச் சிறியதாக உள்ளது. இனி கடைகளை 500 சதுரஅடிக்கு மேலான இடங்களில் வைக்க முடிவு செய்துள்ளோம்.

    அப்படி இடம் அமையும்போது பில் போட தனி இடம் இருக்கும். தற்போது 500 சதுரஅடிக்கு மேலான இடங்களில் உள்ள கடைகளை கண்டறிந்து அங்கு பில் எந்திரம் வைக்க முடிவு செய்துள்ளோம். மற்ற கடைகளை மாற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்வோம். பில் வழங்கும் முறையை கொண்டு வருவோம். கேரளாவில் இந்த நிலை உள்ளது. ஆனால் அங்கு கடை ஆயிரம் சதுரஅடிக்கு மேல் உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.

    Next Story
    ×