என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வேலூரில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்குகிறார்
    X

    வேலூரில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்குகிறார்

    • வேலூர் அண்ணாசாலையில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.

    வேலூர்:

    தி.மு.க. பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா வேலூர் அடுத்த பள்ளிகொண்டா கந்தனேரியில் இன்று மாலை நடக்கிறது. இதற்காக சென்னையில் இருந்து ரெயில் மூலம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று இரவு காட்பாடி வந்தார்.

    அவருக்கு அமைச்சர் துரைமுருகன் மாவட்ட செயலாளர் ஏ. பி நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு வேலூரில் உள்ள தனியார் ஓட்டலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்கினார்.

    இன்று காலை வேலூர் அண்ணாசாலையில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து வேலூர் அடுத்த மேல்மொணவூர் அப்துல்லாபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்றார்.

    அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறும் திடலுக்கு சென்றார். அங்கு பிரமாண்ட கொடி கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் தனியார் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுத்தார். தி.மு.க முப்பெரும் விழா இன்று மாலை பிரமாண்டமாக நடக்கிறது.

    இதில் கலைஞர் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் உள்ள 4 மண்டலங்களில் ஒன்றியம் நகரம் பகுதி பேரூர் ஆகியவற்றில் கட்சி பணிகளில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று பண முடிப்பினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.

    விருது வழங்கும் விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார்.

    தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதை கி.சத்திய சீலனுக்கும் அண்ணா விருதை கா.சுந்தரத்திற்கும், கலைஞர் விருதை ஐ.பெரியசாமிக்கும் பாவேந்தர் பாரதிதாசன் விருதை திருமதி மலிகா கதிரவனுக்கும், பேராசிரியர் விருதை ந.இராமசாமிக்கும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர் பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நன்றி கூறுகிறார்.

    விழாவில் அமைச்சர்கள் தலைமைக்கழக நிர்வாகிகள் எம்.பி எம்.எல்.ஏ.க்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி வேலூரில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர் புதிய பஸ்நிலையம் பின்புறம் அருகே உள்ள தனியார் ஓட்டல், பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை, மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மற்றும் முப்பெரும் விழா நடைபெறும் கந்தனேரி ஆகிய பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி டிரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×