search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அயன்பாப்பாக்குடியில் பொங்கிவரும் கழிவுநீர் நுரை சாலையில் பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
    X

    சாலையை மறைக்கும் அளவுக்கு நுரை தேங்கிக்கிடக்கும் காட்சி.

    அயன்பாப்பாக்குடியில் பொங்கிவரும் கழிவுநீர் நுரை சாலையில் பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

    • வெள்ளக்கல் பகுதியில் மறுகால் பாயும் இடத்தில் பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை பொங்கி வருகிறது.
    • பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மதுரை:

    மதுரை அவனியாபுரத்தில் உள்ள அயன் பாப்பாக்குடியில் தொடர் மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து அதிக அளவில் கழிவு நீர் வெளியேறி வருகிறது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர் மழை நீரோடு கலந்து அயன் பாப்பாக்குடி கண்மாயில் பாசன கால்வாயில் திறந்து விடப்படுகிறது.

    அத்துடன் பல்வேறு பகுதியிலிருந்து திறந்து விடப்படும் கழிவுநீரும் கண்மாயில் கலப்பதால் அயன்பாப்பாக்குடி கண்மாயிலிருந்து வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் இடத்தில் நீரின் வேகம் அதிகமாக செல்வதாலும், மறுகால் பாயும் பாலத்தின் அருகில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து இருப்பதாலும் நீரின் வேகத்தை அந்த ஆகாயத்தாமரைகள் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால் வெள்ளக்கல் பகுதியில் மறுகால் பாயும் இடத்தில் பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை பொங்கி வருகிறது.

    இந்த நுரையானது அங்கு மலை போல் பெருகி காற்றில் பறந்து அருகில் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் பறப்பதால் வாகன ஓடிகள் பெரிதும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று வெள்ளைக்கல் நுரை மலைபோல் எழுந்து விமான நிலையம் செல்லும் சாலை முழுவதும் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

    அந்த தினமும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் கழிவு நீரால் உருவான நுரையால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 5 நாட்களாக இந்த சிரமத்தை சந்தித்து வரும் அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இனிமேலும் தாமதிக்காமல் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வெள்ளை கல்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×