search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 14,300 பேருக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
    X

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 14,300 பேருக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 அடி உயர பிரமாண்ட கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.
    • பாச்சல் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.

    திருப்பத்தூர்:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் ஜவ்வாதுமலையில் நடைபெறும் கோடை விழாவில் பங்கேற்க உள்ளார்.

    இதில் கலந்துகொள்ள நேற்று வேலூர் வந்த அவர் வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் இரவு முழுவதும் தங்கினார்.

    இதனைத்தொடர்ந்து இன்று காலை மாவட்டத்திற்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார்.

    திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான மாதனூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு மேள தாளங்கள், நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்றனர்.

    அதைத்தொடர்ந்து ஆம்பூரில் சென்னை-பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 அடி உயர பிரமாண்ட கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.

    அதனை தொடர்ந்து வாணியம்பாடி அருகே தனியார் மண்டபத்தில் தி.மு.க. சமூக வலைதள செயற்பாட்டளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    இதனை தொடர்ந்து வாணியம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி உயர கொடி கம்பத்தில் கழக கொடியேற்றி வைத்தார்.

    தொடர்ந்து செட்டியப்பனூர் கூட்டு ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நிழற்கூடத்தையும் திறந்து வைத்தார்.

    ஜோலபேட்டை அருகே மண்டலவாடியில் நடைபெற்ற அரசு நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் 14,300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அதனை தொடர்ந்து பாச்சல் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு திருப்பத்தூர் விருந்தினர் மாளிகையில் மதியம் உணவு அருந்த சென்றார்.

    மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    ஆய்வு பணிகளை முடித்து விட்டு இரவு 7 மணிக்கு தனியார் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 1000 கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார்.

    அங்கு நிகழ்ச்சியை முடித்து கொண்டு இரவு ஏலகிரிமலையில் ஒய்வு எடுக்கிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சாலையின் இருபுறங்களுக்கும் கட்சி கொடி கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டு உள்ளது.

    அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×