search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X

    தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • தமிழகத்தில் 19 பகுதிகளில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன.
    • கூடலூரில் அமைய உள்ள மாவட்ட மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன ஆஸ்பத்திரி அமைக்கப்பட உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரி ரூ.31 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது.

    விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. எனவே யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. கேரள மாநிலத்தின் அண்டை மாவட்டங்களாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரளாவின் எல்லையோர பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவ அதிகாரிகள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை கண்காணித்து காய்ச்சல் அறிகுறியுடன் எவரேனும் உள்ளனரா என்பது குறித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு இருப்போருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கூடலூர் தாலுகா அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இதன்படி அந்த மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளார்.

    தமிழகத்தில் 19 பகுதிகளில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் மாநில அளவில் மேலும் 6 புதிய மாவட்ட மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.1100 கோடி மதிப்பில் கட்டிடப்பணிகள் நடந்து வருகின்றன.

    கூடலூரில் அமைய உள்ள மாவட்ட மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன ஆஸ்பத்திரி அமைக்கப்பட உள்ளது. மேலும் 7 படுக்கைகளுடன் டயாலிசிஸ் மையமும், 10 படுக்கைகளுடன் மனநல மருத்துவ மையமும், அவசர சிகிச்சை மையமும், 14 படுக்கைகளுடன் எலும்பு முறிவு சிகிச்சை மையமும் அமைய உள்ளது. இதுதவிர கண் சிகிச்சை, அறுவை சிகிச்சை, மகப்பேறு மையம் மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவு ஆகியவை தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×