search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்- அமைச்சர் கே.என்.நேரு
    X

    சென்னையில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்- அமைச்சர் கே.என்.நேரு

    • முதலமைச்சர் 150 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்.
    • சென்னையில் 372 இடங்களில் சுமார் 3,732 இருக்கைகள் கொண்ட கழிவறைகள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை வியாசர்பாடி, இளங்கோ நகர், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் துணை சேவைகளுடன் நிறுவப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தினை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    சென்னையில் நாளொன்றுக்கு 1000 எம்.எல்.டி. அளவிற்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த 30 ஆண்டுகளுக்கு சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்குப் பார்வையோடு 150 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்கள். மேலும், 400 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த காலங்களில் பாசன பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஏரிகள் கண்டறியப்பட்டு அவற்றைத் தூர்வாரி, ஆழப்படுத்தி மழைநீரை சேகரித்து குடிநீர் ஆதாரமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். மேலும், பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவச் சேவைகளை வழங்க தற்போது கூட சுமார் 736 நலவாழ்வு மையங்களை அமைக்க உத்தரவிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    சென்னையில் 372 இடங்களில் சுமார் 3,732 இருக்கைகள் கொண்ட கழிவறைகள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சாலை வசதி, மருத்துவச் சேவைகள், மழைநீர் வடிகால் பணிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் பணிகள் போன்ற அனைத்து விதமான அடிப்படைத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×