search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகரிப்பால் மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு சிறப்பு மலை ரெயில்
    X

    சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகரிப்பால் மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு சிறப்பு மலை ரெயில்

    • வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • ஊட்டி-குன்னூர் இடையே மாலை 4.45 மணிக்கும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்:

    தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் இதமான சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டிக்கு சுற்றுலா செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் மலைரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மேலும் கூடுதலாக மலை ரெயில்களை இயக்குவதென தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அந்தவகையில் வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கட்கிழமை வரை 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது. அந்த நாட்களில் குன்னூர்-ஊட்டி இடையே காலை 8.20 மணிக்கும், ஊட்டி-குன்னூர் இடையே மாலை 4.45 மணிக்கும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படும்.

    இதுதவிர மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும். மேலும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு இயக்கப்பட உள்ளது. இதே போல ஊட்டி-கேத்தி இடையே வெள்ளி முதல் திங்கள் வரை 4 நாட்களுக்கு காலை 9.45 மணி, காலை 11.30 மணி, மாலை 3 மணி என்ற இடைவெளிகளில் சிறப்பு மலைரெயில்கள் இயக்கப்படும்.

    ஊட்டி-குன்னூர் இடையேயான மலை ரெயிலில் உள்ள 5 பெட்டிகளில் 80 முதல் வகுப்பு, 130 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 210 இருக்கைகள் அமையும். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான 4 ரெயில் பெட்டிகளில் 40 முதல் வகுப்பு, 92 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 132 இருக்கைகள் இடம்பெற்றிருக்குமென தென்னக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×