search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 11 இடங்களில் நடந்தது- மருத்துவ முகாம்களில் குடும்பத்துடன் திரண்டனர்
    X

    சென்னையில் 11 இடங்களில் நடந்தது- மருத்துவ முகாம்களில் குடும்பத்துடன் திரண்டனர்

    • மருத்துவ முகாம்களில் காலையிலேயே பெருமளவில் மக்கள் திரண்டனர்.
    • முன்பெல்லாம் சிறப்பு மருத்துவ வசதிகளை பெற அரசு ஆஸ்பத்திரிகளை தேடி செல்ல வேண்டும்.

    சென்னை:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. சென்னையில் மட்டும் 11 இடங்களில் நடந்தது.

    சென்னை கோடம்பாக்கத்தில் மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    இந்த மருத்துவ முகாம்களில் காலையிலேயே பெருமளவில் மக்கள் திரண்டனர். பலர் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்திருந்தார்கள்.

    முகாம்களில் பொதுமருத்துவம், பொதுவான மருத்துவ ஆலோசனைகள், ரத்தத்தில் கொழுப்புச்சத்து, முழு ரத்த பரிசோதனை, மார்பக பரிசோதனை, காசநோய் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை, பல், கண், குழந்தை பேறு உள்ளிட்ட அனைத்து விதமான நோய்கள் கண்டறிதல், தேவைப்படுபவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    தனியார் ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்தால் ஆயிரக்கணக்கில் செலவாகும் என்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து உடல் பரிசோதனை செய்து கொண்டார்கள்.

    மருத்துவ முகாம் பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முதலில் தொடங்கியவர் கலைஞர். அவர் வாழும் காலம் வரை இந்த துறைக்காக ஏராளமான திட்டங்களையும் பெருமளவு நிதியையும் ஒதுக்கினார்.

    எனவே அவரது நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது சிறப்புக்குரியது.

    முன்பெல்லாம் சிறப்பு மருத்துவ வசதிகளை பெற அரசு ஆஸ்பத்திரிகளை தேடி செல்ல வேண்டும். ஆனால் தளபதி ஆட்சியில் மக்களை தேடி மருத்துவம் சென்று கொண்டிருக்கிறது.

    இன்று நடந்து வரும் முகாமிலும் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு முகாமிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் விபத்துகளில் சிக்கிய 1 லட்சத்து 672 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளார்கள். விபத்துகளினால் ஏற்படும் இறப்பும் குறைந்து இருக்கிறது என்றார்.

    பின்னர் அவரிடம் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை தொடர்பாக சந்தேகம் கிளப்புவது பற்றியும் வெளிப்படை தன்மையாக நடக்கவில்லை என்றும் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு, வெளிப்படை தன்மை என்றால் நேரு ஸ்டேடியத்தில் ஆயிரம் பேரை கூட்டி வந்து டேபிள் போட்டு அதில் வைத்தா ஆபரேஷன் செய்வார்கள்? சந்தேகம் கிளப்புபவர்களை இதய அறுவை சிகிச்சை செய்துகொள்ள சொல்லுங்கள். அப்போதுதான் தெரியும் என்றார் கோபமாக.

    Next Story
    ×