என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆடுகளை வேட்டையாட கரட்டில் பதுங்கிய சிறுத்தை- டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
    X

    ஆடுகளை வேட்டையாட கரட்டில் பதுங்கிய சிறுத்தை- டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

    • டிரோன் கேமரா சிறுத்தை அருகில் கொண்டு செல்லும்போது, அது கீழே இறங்கி செல்வது பதிவாகி இருந்தது.
    • சிறுத்தை இருந்த பகுதியில் மரங்கள், பாறைகள் ஆகிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் கட்டி வைத்துள்ளனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி ஊராட்சியில் வைரன்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டியுள்ள பெரிய கரட்டில் கடந்த 2 நாட்களாக சிறுத்தை ஒன்று நடமாடி வந்துள்ளது.

    இதை பார்த்த கிராம மக்கள் அச்சத்தில் வனத்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணித்தனர்.

    சிறுத்தை ஒரே இடத்தில் இல்லாமல் ஒவ்வொரு கரடாக மாறிமாறி சென்று வைரன்காடு பகுதியில் உள்ள கரட்டில் 2 நாட்களாக பதுங்கி இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 4 ஆடுகளை சிறுத்தை வேட்டையாட முயன்றது.

    அப்போது சிறுத்தையிடம் இருந்து தப்பிய 4 ஆடுகள் அங்குள்ள செங்குத்தான பாறைக்கு சென்று தஞ்சமடைந்தன. ஆனால் 4 ஆடுகளும் கீழே இறங்க முடியாமல் எட்டி எட்டி பார்த்தபடி பாறையிலேயே நின்றது. இரவு நேரமானதால் வனத்துறை அதிகாரிகள், ஆடுகள் இருந்த பகுதிக்கு செல்லாமல் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆடுகள் இருந்த பாறையின் மீது ஏறிய சிறுத்தை பாறை மீது பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனை டிரோன் கேமரா மூலம் வனத்துறை அதிகாரிகள் படம் பிடித்தனர். ஆடுகள் செங்குத்தான பாறை பகுதியில் இருந்ததால், சிறுத்தையால் ஆடுகளை வேட்டையாட முடியாமல், பாறையின் மேலே படுத்துக்கொண்டு ஆடுகளை கீழே விரட்டும் வகையில் அச்சுறுத்தி வந்துள்ளது.

    இந்த நிலையில் டிரோன் கேமரா சிறுத்தை அருகில் கொண்டு செல்லும்போது, அது கீழே இறங்கி செல்வது பதிவாகி இருந்தது. இந்த நிலையில் காலை வனப்பகுதிக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், ஆடுகளை பாதுகாப்பாக கீழே விரட்டிவிட்டு, சிறுத்தை படுத்திருந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு சிறுத்தையின் முடி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறுத்தை இருந்த பகுதியில் மரங்கள், பாறைகள் ஆகிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் கட்டி வைத்துள்ளனர். தொடர்ந்து வனத்தை சுற்றிலும் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிறுத்தை இருப்பதை உறுதி செய்துள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து அங்கேயே தங்கி கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×