search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீண்டும் சூடுபிடிக்கும் கொடநாடு வழக்கு: தனபாலிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு- சம்மன் அனுப்ப ஏற்பாடு
    X

    மீண்டும் சூடுபிடிக்கும் கொடநாடு வழக்கு: தனபாலிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு- சம்மன் அனுப்ப ஏற்பாடு

    • தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனபால் தற்போது ஜாமீனில் உள்ளதால் சம்மன் அனுப்பி அவரிடம் விசாரித்துக் கொள்ள கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்டேட்டில் இருந்த சில ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு கொள்ளை கும்பல் தப்பியது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார்.

    தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. தற்போது வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் மறுவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் இதுவரை 300-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரித்து உள்ளனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். வழக்கு தொடர்பான சில விவரங்கள் தெரிந்திருந்தும், அதனை மறைத்ததாக கூறி கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

    இந்நிலையில் தனபால், பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். தனது தம்பி கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது போன்ற பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வருகிறார். இதனால் தனபாலிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்காக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தனபாலிடம் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தனபால் தற்போது ஜாமீனில் உள்ளதால் சம்மன் அனுப்பி அவரிடம் விசாரித்துக் கொள்ள கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

    இதையடுத்து தனபாலுக்கு சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அவர் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து அரசு தரப்பு வழக்கில் ஆனந்த் கூறுகையில் கனராஜின் அண்ணன் தனபாலிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஊட்டி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இதற்கு தனியாக உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. சம்மன் அளித்து விசாரித்துக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றார்.

    Next Story
    ×