search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகம், கல்லூரிகள் உள்ளிட்ட 80 இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை
    X

    அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகம், கல்லூரிகள் உள்ளிட்ட 80 இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை

    • சென்னையில் தி.நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சோதனை
    • திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது

    தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமாக திருவண்ணாமலையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அருணை என்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கம்பன் கலைக் கல்லூரி ஆகியவை ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன.

    இந்த கல்லூரிகள் செயல்பட்டு வரும் வளாகத்திலேயே எ.வ. வேலுவின் வீடு மற்றும் முகாம் அலுவலகம் ஆகியவையும் உள்ளன. இந்த நிலையில் அருணை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள 3 கல்வி நிறுவனங்கள், அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு, அலுவலகம் என 5 இடங்களிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    காலை 6 மணி அளவில் 10 கார்களில் சென்ற 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அருணை என்ஜினீயரிங் கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். கல்வி நிறுவனங்களில் மாணவ- மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட கல்வி கட்டணங்கள் எவ்வளவு? என்பது பற்றி கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    கல்வி நிறுவனங்கள் சார்பில் முறையாக வருமான வரி கட்டப்பட்டு உள்ளதா? என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கல்லூரிகளில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

    இதேபோன்று சென்னை, கோவை, கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொடர்புடையதாக கருதப்படும் இடங்களிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தம் 80 இடங்களில் வருமானவரி சோதனை நடந்து வருகிறது. சென்னையில் வேப்பேரி, தி.நகர், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 2 கட்டுமான நிறுவனங்களில் ஒரு நிறுவனத்துக்கு சொந்தமாக தி.நகர் பகுதியில் 2 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. இங்கும் வருமானவரித்துறை அதிகாரிகள் 8 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    80 இடங்களில் நடத்தப்படும் சோதனையில் சுமார் 50 சதவீத இடங்கள் பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களாகும். ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான 40 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை சரிபார்த்தனர்.

    பொதுப்பணித்துறையின் கீழ் நடைபெறும் பல்வேறு கட்டிட பணிகளை இந்த ஒப்பந்ததாரர்கள்தான் மேற்கொண்டு வருகிறார்கள். அதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா? அவர்கள் வரிஏய்ப்பில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது பற்றியும் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×