என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    என்னை கைது செய்யாததால் ஐ.பி.எஸ். அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய தி.மு.க.: அண்ணாமலை குற்றச்சாட்டு
    X

    என்னை கைது செய்யாததால் ஐ.பி.எஸ். அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய தி.மு.க.: அண்ணாமலை குற்றச்சாட்டு

    • தமிழகத்தில் தி.மு.க அமைச்சர்கள் மோடியை பார்த்து பயப்படுகின்றனர்.
    • என் மீதும், பா.ஜ.க. மீதும் குற்றச்சாட்டுகளை வாரி இரைக்கும் முதலமைச்சர் ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொள்ளட்டும்.

    கொடைக்கானல்:

    தமிழகம் முழுவதும் என் மண், என் மக்கள் நடைபயணத்தை பா.ஜ.க.மாநிலத்தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் 5 நாள் நடைபயணம் மேற்கொண்டுள்ள அவர் கொடைக்கானல் நாயுடுபுரம், சித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து தொடங்கினார்.

    ஏரிச்சாலை, பஸ்நிலையம், அண்ணாசாலை வழியாக மூஞ்சிக்கல் பஸ்நிலையம் வரை நடந்து சென்றார். அப்போது அவர் பேசியதாவது,

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் ரூ.30ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். ஊழல்வாதிகளாக திகழும் தி.மு.க கமிசனுக்காக கடன் வாங்கும் அரசாக உள்ளது. ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசு விரட்டியடிக்கப்பட்டு தற்போது இந்தியா பாதுகாப்பான நாடாக திகழ்ந்து வருகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது எத்தனை குண்டுவெடிப்புகள், எத்தனை பயங்கரவாத தாக்குதல்கள் நாட்டுக்கு இருந்தது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதா? இந்தியா உலகளவில் தலைநிமிர்ந்து வல்லரசு நாடுகளை வழிநடத்தும் நாடாக மாறி வருகிறது.

    இதனால்தான் தமிழகத்தில் தி.மு.க அமைச்சர்கள் மோடியை பார்த்து பயப்படுகின்றனர். சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பதவி விலககோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட என்னை கைது செய்யாததற்காக 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர்.

    என் மீதும், பா.ஜ.க. மீதும் குற்றச்சாட்டுகளை வாரி இரைக்கும் முதலமைச்சர் ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொள்ளட்டும். ஒரே ஒரு குடும்பத்திற்காக அவர் உழைத்து வருகிறார். மகனும், மருமகனும் சம்பாதிக்கவேண்டும் என்பதற்காக தி.மு.க ஆட்சி நடந்து வருகிறது.

    சனாதான தர்மம் என்றால் தி.மு.க.வினருக்கு குழப்பம் வருகிறது. மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதை சொல்லி கொடுக்கும் தர்மமே சனாதானம். அனைவரையும் அரவணைத்து செல்லும் இந்த கொள்கையை பா.ஜ.க தொடர்ந்து கூறி வருவதால் குடும்ப ஆட்சி நடத்தும் தி.மு.க.விற்கு கசப்பாக தெரிகிறது.

    விரைவில் தமிழகத்தின் தலையெழுத்து மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின் இடையே திடீரென காட்டுமாடு கூட்டத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை நிர்வாகிகள் விரட்டியடித்தனர். தொண்டர்களை மகிழ்விக்கும் வகையில் அண்ணாமலை நடனமாடியும், குதிரை மீது அமர்ந்து சவாரி செய்தும் பிரசாரம் செய்தார்.

    நிலக்கோட்டை, ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் இன்றுமாலை அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.

    Next Story
    ×