search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி-  28ந் தேதி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை
    X

    (கோப்பு படம்)

    சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி- 28ந் தேதி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

    • திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 28.07.2022 அன்று உள்ளூர் விடுமுறை.
    • சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 27.08.2022 அன்று பணி நாள்.

    44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு விளையாட்டின் தொடக்க நாளான 28.07.2022 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசு செயலாளர் டி.ஜகந்நாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:

    மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு 28.07.2022 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 28.07.2022 அன்று ஒரு நாள் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு அரசு முதன்மை செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேற்காணும் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாளான 28.07.2022 (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

    மேலும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 27.08.2022 அன்று (நான்காவது சனிக்கிழமை) சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.

    மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாட்டினை செய்யுமாறு மேற்கண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×