என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோவையில் தி.மு.க. பெண் நிர்வாகி வீடு உள்பட 5 இடங்களில் வருமான வரி சோதனை
    X

    மீனா ஜெயக்குமார் வீட்டில் சோதனைக்காக வந்த வருமான வரித்துறையினர். 

    கோவையில் தி.மு.க. பெண் நிர்வாகி வீடு உள்பட 5 இடங்களில் வருமான வரி சோதனை

    • மீனா ஜெயக்குமாரின் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால், அது தொடர்பாகவும் சோதனை மேற்கொண்டனர்.
    • சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    கோவை:

    தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளராக பதவி வகித்து வருபவர் மீனா ஜெயக்குமார். இவர் கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தில் தனது கணவர் ஜெயக்குமாருடன் வசித்து வருகிறார். ஜெயக்குமார் கோவையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர்களது வீட்டிற்கு இன்று அதிகாலை 3 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் மீனா ஜெயக்குமாரின் வீட்டிற்குள் சென்று சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையின்போது யாரும் உள்ளே வரமுடியாதபடி வீட்டின் கதவினை அடைத்து விட்டனர். மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி வைத்து கொண்டனர். வீட்டில் உள்ள நபர்களை தவிர அங்கிருந்தவர்களை வெளியில் அனுப்பி விட்டனர்.

    அதனை தொடர்ந்து அதிகாரிகள், வீடு முழுவதும் சோதனை நடத்தினர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக அலசி ஆராய்ந்து, சோதனை மேற்கொண்டனர். வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றியதாக தெரிகிறது.

    மீனா ஜெயக்குமாரின் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால், அது தொடர்பாகவும் சோதனை மேற்கொண்டனர். மேலும், இவர் அரசு ஒப்பந்தங்கள் ஏதாவது எடுத்து பணி செய்துள்ளாரா? அப்படி செய்திருந்தால் அது தொடர்பான ஆவணங்கள் வீட்டில் இருக்கிறதா? என்பதையும் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.

    சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்திய தி.மு.க. பெண் பிரமுகர் மீனா ஜெயக்குமாரின் வீடு.

    இதேபோல் அதே வளாகத்தில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையையொட்டி அந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    போலீசார் அந்த குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்களை தவிர மற்ற நபர்களை உள்ளே அனுமதிக்காமலும், கூட்டம் கூடாமலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீராமுக்கு சொந்தமான அலுவலகங்கள் சவுரிபாளையம் மற்றும் பீளமேடு பகுதியில் செயல்பட்டு வருகின்றன. அந்த இடங்களிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் கோவை கிழக்கு மண்டல தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.எம்.சாமி என்பவரது வீட்டிலும் சோதனை நடந்தது. சிங்காநல்லூரில் உள்ள இவரது வீட்டிற்கு 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட னர்.

    வீட்டில் இருந்து ஆவணங்களை கைப்பற்றியுள்ள வருமான வரித்துறையினர் இது தொடர்பாக வீட்டில் இருந்த எஸ்.எம்.சாமியிடமும் விசாரணை நடத்தினர்.

    கோவையில் தி.மு.க. பிரமுகர் வீடு உள்பட 5 இடங்களில் சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×