search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10 பாராளுமன்ற தொகுதிகளில் ஓ.பி.எஸ்., தினகரன் வெற்றியை நிர்ணயிப்பார்கள்- பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து
    X

    10 பாராளுமன்ற தொகுதிகளில் ஓ.பி.எஸ்., தினகரன் வெற்றியை நிர்ணயிப்பார்கள்- பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து

    • தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பங்கேற்பதால் இருவரும் பாராளுமன்ற தேர்தலின் போது கை கோர்ப்பார்கள் என்றே தெரிகிறது.

    சென்னை:

    கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தருவோம் என கூறிய தி.மு.க. இதுவரை அதை நிறைவேற்றவில்லை என்றும் இதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் 1-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.ம.மு.க. தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில், தேனியில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். உடன் இணைந்து டி.டி.வி.தினகரன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இவர்கள் இருவரும் இணைவது பாராளுமன்றத் தேர்தலின் போது தேவர் சமுதாய வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் உத்தியாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

    அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அழைக்கப்படாத சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு வந்திருந்தது. அதன் பேரில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    ஆனாலும் பா.ஜனதா தன்னுடனான உறவை முறித்துக் கொள்ளும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாகவே இருப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கம் வைத்துள்ள காரணத்தால் ஒ.பன்னீர்செல்வத்துடன் டி.டி.வி.தினகரன் இப்போது கைகோர்க்க தொடங்கி விட்டார்.

    சமீபத்தில் தினகரனை ஒ.பன்னீர்செல்வம் சென்று சந்தித்து பேசிய நிலையில் இப்போது ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பங்கேற்பதால் இருவரும் பாராளுமன்ற தேர்தலின் போது கை கோர்ப்பார்கள் என்றே தெரிகிறது.

    இதன் மூலம் தென் மாவட்டங்களில் தேவர் சமுதாயம் வலுவாக உள்ள 10 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்வியை இவர்கள் இருவரும் நிர்ணயிப்பார்கள் என்று முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ்.சின் அரசியல் ஆலோசகருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்க்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வருவதால் பாராளுமன்ற தேர்தலில் தங்களது செல்வாக்கை நிரூபிக்க தேவர் சமுதாய வாக்கு வங்கியை தக்க வைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் இணைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×