search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    குமரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கனமழை: மயிலாடியில் 55.4 மில்லிமீட்டர் பதிவு
    X

    பெத்தபெருமாள் குடியிருப்பு இசக்கியம்மன் கோவில் தெரு பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை காணலாம். 

    குமரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கனமழை: மயிலாடியில் 55.4 மில்லிமீட்டர் பதிவு

    • இடிச்சத்தம் காதை பிளக்கும் வகையிலும், மின்னல் கண்ணை பறிக்கும் வகையிலும் இருந்தது
    • நாகர்கோவிலில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது.

    நாகர்கோவில்:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நெல்லூர்-மசூலிபட்டினம் இடையே 5-ந்தேதி கரையை கடக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    குமரி மாவட்டத்திலும் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கொட்டாரம், மயிலாடி பகுதியில் மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் இடைவிடாது வெளுத்து வாங்கியது.

    இடிச்சத்தம் காதை பிளக்கும் வகையிலும், மின்னல் கண்ணை பறிக்கும் வகையிலும் இருந்தது. கனமழையால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 55.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

    அதன் பிறகு மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருக்கிறது. பூதப்பாண்டி, களியல், சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல், மாம்பழத்துறையாறு, ஆரல்வாய்மொழி, அடையா மடை, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய் தது.

    நாகர்கோவிலில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் அணைகளில் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்தது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.18 அடியாக உள்ளது. அணைக்கு 425 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 403 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.53 அடியாக உள்ளது. அணைக்கு 225 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.84 அடியாக உள்ளது. அணைக்கு 119 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 2 அணை நீர்மட்டம் 15.94 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 8 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணையின் முழு கொள்ளளவு எட்டி நிரம்பி வழிகின்றன.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 3.8, பெருஞ்சாணி 2.2, சிற்றார் 1-2, சிற்றார் 2-10.4, பூதப்பாண்டி 15.2, களியல் 25, கன்னிமார் 4.6, கொட்டாரம் 23.6, குழித்துறை 29.6, மயிலாடி 55.4, நாகர்கோவில் 34.2, புத்தன்அணை 1.8, சுருளோடு 5, தக்கலை 7, குளச்சல் 24.8, இரணியல் 13.2, பாலமோர் 7.2, மாம்பழத்துறையாறு 4, திற்பரப்பு 20.4, கோழிப்போர்விளை 5.4, அடையாமடை 21.2, குருந்தன்கோடு 13.4, முள்ளங்கினாவிளை 21.6, ஆணை கிடங்கு 3.2, முக்கடல் 4.6.

    Next Story
    ×