search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
    X

    ஐந்தருவியில் 4 கிளைகளில் தண்ணீர் விழுவதை காணலாம்

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    • தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது.
    • ஐந்தருவியில் 4 கிளைகளிலும், மெயின் அருவியில் ஓரமாகவும் தண்ணீர் விழுகிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலமும் ஒன்றாகும்.

    இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, புலியருவிகளில் சீசன் காலக்கட்டங்களில் வெளிமாவட்டம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும்போது மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு சீசன் களைகட்டும்.

    இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த 4-ந்தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்காசியில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்ய தொடங்கியது.

    இதனால் தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு பெய்த சாரல் மழை காரணமாக பாறைகளாக காட்சியளித்து வந்த குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கி உள்ளது. ஐந்தருவியில் 4 கிளைகளிலும், மெயின் அருவியில் ஓரமாகவும் தண்ணீர் விழுகிறது.

    இன்று காலை முதல் குற்றால பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் குளிக்க வந்தனர். அங்கு இன்று காலையில் வெயில் அடித்தாலும், குளிர்ந்த காற்று வீசி வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை நீடிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் மேலும் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

    Next Story
    ×