search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை உள்பட 6 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
    X

    சென்னை உள்பட 6 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

    • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளது.
    • ஆழ்கடலுக்கு சென்றவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய இயல்பான அளவு பருவமழை பெய்யவில்லை.

    தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் போதுமான அளவு மழை பொழிவு இல்லை.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் 1-ந் தேதி முதல் நேற்று வரை 32 செ.மீ. மழை பெய்து உள்ளது. இது இயல்பை விட 8 சதவீதம் குறைவாகும்.

    பருவமழை காலத்தில் இதுவரையில் ஒரே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி மட்டுமே உருவாகி மழையை கொடுத்து உள்ளது. காற்றின் மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சியால் பருவமழை பெய்து வந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 27-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவியது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை 5.30 மணி நிலவரப்படி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவுகிறது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அதன் பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2-ந்தேதி வாக்கில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் படிப்படியாக புயலாக வலுவடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    வங்கக்கடலில் புயலுக்கான வலுவான சூழல் நிலவி வருவதால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அநேக இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

    டிசம்பர் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    டிசம்பர் 2 மற்றும் 3-ந்தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். இதனால் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

    புயல் சின்னம் வலுவடைகின்ற நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் சூறாவளி காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் 40 கி.மீ. வேகத்தில் இருந்து படிப்படியாக அதிகரிக்கும். டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

    மேலும் ஆழ்கடலுக்கு சென்றவர்கள் இன்று (30-ந்தேதி) மாலைக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்யும். அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

    Next Story
    ×