search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை, நீலகிரியில் கொட்டி தீர்த்த கோடை மழை- சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    கோவை, நீலகிரியில் கொட்டி தீர்த்த கோடை மழை- சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

    • மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா சாலை, ரோஜா பூங்கா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக காலையில் வெயிலும், பிற்பகலுக்கு பிறகு மேகமூட்டத்துடன் கூடிய காலநிலையும் நிலவி வந்தது. சில நேரங்களில் மிதமான மழையும் பெய்து வந்தது.

    இந்நிலையில் நேற்று காலை முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவியது.

    பிற்பகலுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக ஊட்டி சேரிங்கிராஸ், கமா்சியல் சாலை, மத்திய பஸ் நிலையம், முள்ளிக்கொரை, பொ்ன்ஹில், காந்தல், பிங்கா் போஸ்ட் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா சாலை, ரோஜா பூங்கா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

    சமவெளிப் பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஊட்டிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் மழை காரணமாக உருவான இதமான காலநிலையை வெகுவாக அனுபவித்தனா். மேலும் சில சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர்.

    கோவை மாவட்டத்திலும் நேற்று காலையில் கடும் வெயில் சுட்டெரித்தது. மதியத்திற்கு பிறகு வானில் மேக கூட்டங்கள் திரண்டு காலநிலை முற்றிலும் மாறி காணப்பட்டது. மாலையில் காந்திபுரம், ரெயில் நிலையம், பாப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

    இந்த மழை காரணமாக அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

    கோடை மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான கால நிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×