search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏற்காட்டில் தொடர் மழையால் குளிர்ந்த காற்று வீசுகிறது: பனிமூட்டத்தில் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
    X

    ஏற்காட்டில் நிலவி வரும் கடும் பனிமூட்டத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

    ஏற்காட்டில் தொடர் மழையால் குளிர்ந்த காற்று வீசுகிறது: பனிமூட்டத்தில் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்

    • பகல், இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
    • தற்போது தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டுதோறுமே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் இங்குள்ள காட்சி முனைகளை ரசித்து பார்த்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வார்கள்.

    குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையால் ஏற்காடு நகரமே களை கட்டும்.

    கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதையில் உள்ள பல்வேறு அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள். மேலும் தொடர் மழையின் காரணமாக குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    பகல், இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவட்டர், உல்லன் ஆடைகளை அணிந்து வந்து செல்கிறார்கள். மேலும் பஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் டிரைவர்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    மதியம் 3 மணிக்கு மேல் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. அது காலை 10 மணி வரை நீடிக்கிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி வந்து செல்கிறது. மேலும் சுற்றுலா பயணிகள் சிலர் உல்லன் ஆடைகளை அணிந்து கொண்டு பனிமூட்டத்தில் நடைபயிற்சி சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் சிலர் பனிமூட்டத்தில் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    தற்போது தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. ஆனால் சேலம் மற்றும் ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பேர் தினமும் வந்து செல்கிறார்கள். அவர்கள் ஏற்காட்டில் நிலவி வரும் ரம்மியமான சூழலை அனுபவித்து வருகிறார்கள்.

    Next Story
    ×