search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குட்கா வழக்கு விசாரணை 11-வது முறையாக தள்ளிவைப்பு: சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு
    X

    குட்கா வழக்கு விசாரணை 11-வது முறையாக தள்ளிவைப்பு: சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு

    • குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான சில ஆவணங்கள் சிக்கின.
    • 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை 19-ந்தேதி அனுமதி வழங்கியது.

    சென்னை:

    சென்னை செங்குன்றம் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான சில ஆவணங்கள் சிக்கின. அதில், அப்போதைய அமைச்சர்கள், சென்னை போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் இருந்தன.

    இதுகுறித்து, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து, குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்று 6 பேரை முதலில் கைது செய்தது.

    இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை முதலில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்பட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை 19-ந்தேதி அனுமதி வழங்கியது.

    இதன்படி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குறைபாடுகள் இருப்பதாக கூறி திருப்பிக்கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. அதிகாரி ஆஜராகி, "அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு இன்னும் அனுமதி தரவில்லை. அதனால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" என்றார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை ஆகஸ்டு 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி முதல் நேற்று வரை 11 முறை வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×