search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அருப்புக்கோட்டையில் அரசு பஸ் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: கிளீனர் உள்பட 2 பேர் பலி
    X

    கிரேன்கள் மூலம் அரசு பஸ் மீட்கப்பட்ட காட்சி - சரக்கு லாரியின் முன்பகுதி சேதமடைந்திருப்பதை காணலாம் 

    அருப்புக்கோட்டையில் அரசு பஸ் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: கிளீனர் உள்பட 2 பேர் பலி

    • சரக்கு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக நின்றிருந்த அரசு பஸ்சின் பின்னால் பயங்கரமாக மோதியது.
    • பஸ்சில் பயணம் செய்த ஆனந்த், பிரகாஷ், தனுசு, ராஜேஷ், ராஜா, அந்தோணி உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    தூத்துக்குடி மாவட்டம் நான்குமாவடியில் ஜெபக்கூட்டம் நடந்து வருகிறது. இதற்காக திருச்சியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் நான்குமாவடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சியில் இருந்து நேற்று இரவு நான்குமாவடிக்கு அரசு பஸ் புறப்பட்டது. இன்று அதிகாலை அருப்புக்கோட்டை பைபாஸ் ரோட்டில் வந்துகொண்டிருந்தபோது திடீரென பஸ்சில் பழுது ஏற்பட்டது. இதனால் பஸ்சை டிரைவர் கிருஷ்ணன் சாலை ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.

    அப்போது அதே சாலையில் சென்னை குன்றத்தூரில் இருந்து தனியார் விளம்பர கம்பெனிக்கு சொந்தமான சரக்கு லாரி விளம்பர பதாகை கம்பிகளை ஏற்றிக்கொண்டு வந்தது.

    அந்த சரக்கு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக நின்றிருந்த அரசு பஸ்சின் பின்னால் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. இதில் சரக்கு வாகனத்தில் கிளீனராக வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜ கரு இஸ்லாம் (வயது 19) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    பஸ்சில் பயணம் செய்த சிவகங்கையைச் சேர்ந்த சின்னத்தம்பி (வயது 49) படுகாயமடைந்தார். அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    மேலும் பஸ்சில் பயணம் செய்த ஆனந்த், பிரகாஷ், தனுசு, ராஜேஷ், ராஜா, அந்தோணி உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் வந்தனர். அவர்கள் காயப்பட்டவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கிரேன்கள் வரவழைக்கப்பட்டு அரசு பஸ் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×