என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் சுவர் பகுதி சேதம் அடைந்துள்ளது.
முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
- பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் படுக்கை அறையின் ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் தீப்பிடித்து எரிந்தது.
- சி.சி.டி.வி கேமிரா பதிவுகளில் மர்மநபர்கள் குறித்து ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகரையாத்தூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 50). இவரது மனைவி பூங்கொடி (40). இவர் முன்னாள் ஊராட்சி தலைவர் ஆவார்.
இந்நிலையில் நேற்று இரவு வைத்தியநாதன் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், அவரது வீட்டிற்கு பின்பக்கமாக வந்த மர்ம நபர்கள் படுக்கை அறை மற்றும் சமையல் அறை பகுதியில் பெட்ரோல் குண்டு வீசினர்.
குண்டு வீசிய சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக வெளியே ஓடி வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் படுக்கை அறையின் ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் தீப்பிடித்து எரிந்தது. கண்ணாடி பாட்டில்களும் சுக்கு நூறாக உடைந்து கிடந்தது.
ஜன்னல் கதவுகள் மூடியிருந்ததால் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். இதுகுறித்து வைத்தியநாதன் எடப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் டி.எஸ்.பி கலையரசன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளில் மர்மநபர்கள் குறித்து ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குண்டு வீச்சு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? குண்டு வீசப்பட்டதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






