search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு- தென்காசி மாவட்ட அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
    X

    களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் 2-வது நாளாக குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு- தென்காசி மாவட்ட அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

    • நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.
    • சென்னை, தூத்துக்குடி மற்றும் வெளியூர்களில் இருந்து நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக கனமழை பெய்வதால் கடையம் அருகே உள்ள ராமநதி மற்றும் கடனா அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி நேற்று 6 அடி நீர்இருப்பு அதிகரித்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்துள்ளது. இதேபோல் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 61 அடியை எட்டி உள்ளது.

    36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை 34.50 அடியை எட்டி உள்ளது. இதேநிலையில் மழை பெய்தால் இன்று இரவுக்குள் அந்த அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணை பகுதியில் 18 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 17 மில்லிமீட்டரும், கடனா அணை பகுதியில் 15 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் அந்த அணகளுக்கு வினாடிக்கு 1388 கனஅடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அந்த அணைகளில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1204.75 கனஅடி நீர் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 425 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை.

    மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, மூலக்கரைப்பட்டி, பாளை உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் நாற்று நடவு பணிகள், தொழி அடித்தல் உள்ளிட்ட பணிகளில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர்.

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை பெய்து வருகிறது. ஊர் பகுதிகளை விட உள்மலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் களக்காடு தலையணையில் நேற்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் செல்கிறது.

    இதனைதொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் தலையணையில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வன சரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறை ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் தலையணையை சுற்றி பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, தூத்துக்குடி மற்றும் வெளியூர்களில் இருந்து நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் தலை யணையை சுற்றி பார்த்து விட்டு, திரும்பி சென்றனர்.

    தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் இன்று 2-ம் நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் பெரும்பாலான இடங்களில் உப்பளங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மாநகர பகுதியில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது.

    சூரங்குடியில் அதிகபட்சமாக 20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்செந்தூரில் 18 மில்லிமீட்டரும், கழுகுமலையில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேலும் குலசேரகப்பட்டினம், காயல்பட்டினம், வைப்பார், வேடநத்தம், காடல்குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    Next Story
    ×