என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. தலைமையில் வலிமையான கூட்டணி அமையும்
- தி.மு.க. அரசு அமைந்த பிறகு, தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு புதிய தொழிற்சாலைகள் வரவில்லை.
- வெள்ள நிவாரண தொகை போதாது, தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண தொகை உயர்த்தி வழங்க வேண்டும்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களூக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி என்பது தெரியவரும். அ.தி.மு.க. தலைமையில் ஒரு வலிமையான கூட்டணி அமையும். புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்.
உலக முதலீட்டாளர் மாநாட்டை ஏற்கனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தினார். அதில் எந்த பயனும் தெரியவில்லை. புதிய தொழிற்சாலை வந்ததாக சொல்கிறார்கள். அவை அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டவை.
தி.மு.க. அரசு அமைந்த பிறகு, தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு புதிய தொழிற்சாலைகள் வரவில்லை.
நிர்வாக திறமையற்ற அரசாங்கம் உள்ளதால், மிச்சாங் புயலின்போது உரிய முன்னெச்சரிக்கை அறிவிக்கப்படவில்லை. இதனால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் தென் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள்.
கனமழை பெய்து கொண்டிருந்த போதே, தாமிரபரணியில் தண்ணீரை திறந்து விட்டதால் 2 லட்சம் கனஅடி தண்ணீர் புகுந்து பல பேர் உயிரிழந்து உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நான் சென்று ஆய்வு மேற்கொண்டபோது எந்த உதவியும் கிடைக்கவில்லை, எந்த அமைச்சரும் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தி.மு.க. ஆட்சி, பொய்யான தோற்றத்தை உருவாக்குகின்ற ஆட்சியாக உள்ளது.
வெள்ளம் வந்து மக்களுக்கு இவ்வளவு பெரிய துன்பம் ஏற்பட்டபோதும் கூட, முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார். இவர் எப்படி நாட்டு மக்களை காப்பாற்றுவார்.
வெள்ள நிவாரண தொகை போதாது, தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண தொகை உயர்த்தி வழங்க வேண்டும். சென்னையில் கடலில் எண்ணெய் மிதப்பதால் மீன் பிடி தொழில் செய்ய முடியாமல் மீனவர்கள் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கும் நிவாரண தொகை உயர்த்தி வழங்கிட வேண்டும்.
அ.தி.மு.க.வின் வயது 51 ஆகிவிட்டது. எனவே அதில் மாற்றம் செய்ய தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






