search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போதை பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்: எடப்பாடி பழனிசாமி
    X

    போதை பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்: எடப்பாடி பழனிசாமி

    • சட்டம்-ஒழுங்கைக் காக்கவும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்கவும், காவல் துறையை சுதந்திரமாக செயல்பட வலியுறுத்தினேன்.
    • தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசின் 28 மாத கால ஆட்சியில் நிர்வாக சீர்கேட்டோடு, கஞ்சா போன்ற போதை மருந்துகளின் நடமாட்டம் மிகவும் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது. கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளின் மயக்கத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்று அனைவரும் சர்வசாதாரணமாக குற்றச் செயல்களில் ஈடுபடுவது; கொலைவெறித் தாக்குதல் நடத்துவது; குறிப்பாக, வணிக நிறுவனங்களைத் தாக்குவது போன்ற சட்ட விரோதச் செயல்களால், வணிக நிறுவனங்களை நடத்தி வரும் வியாபாரிகளி டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    * சென்னை, பெரம்பூரில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவரை, ஒருசில மாணவர்கள் சுற்றி வளைத்து தாக்கியது;

    * புழல் சிறையில் துணை ஜெயிலர் ஒருவரை வெளிநாட்டு கைதி தாக்கிய கேவலம்.

    * பட்டுக்கோட்டையில் பட்டப்பகலில் வியாபாரி, கத்தி போன்ற ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகிறார்;

    * சென்னை, கே.கே. நகரில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் பிரபல ரவுடி ஒருவர், தன் கூட்டாளிகளுடன் பட்டாக்கத்திகளை கையில் ஏந்தி தெருக்களில் நடனமாடிச் சென்று மக்களை மிரட்டும் கொடூரம்;

    * 28.8.2023 அன்று வெளிவந்துள்ள நாளிதழில், திருவொற்றியூரில் 140 கிலோ போதைப்பொருள் பறிமுதல், அரும்பாக்கத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்; 29.8.2023 அன்று வெளி வந்துள்ள நாளிதழில், 10 நாட்களில் 50 கிலோ கஞ்சா மற்றும் 34 பேர் கைது போன்ற செய்திகள் வந்துள்ளன.

    * 'ஆபரேஷன் கஞ்சா 1, 2, 3' போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது என்று கூறும் தி.மு.க. அரசின் 28 மாதகால ஆட்சிக்குப் பிறகும், இதுபோன்ற போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் கைது, போதைப் பொருட்கள் பறிமுதல் என்ற செய்திகள் மட்டும் வருகின்றன.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளதை அடிக்கடி நான் அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் எடுத்துரைத்து வருகிறேன்.

    சட்டம்-ஒழுங்கைக் காக்கவும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்கவும், காவல் துறையை சுதந்திரமாக செயல்பட வலியுறுத்தினேன். ஆனால் இவ்விஷயத்தில், தி.மு.க. அரசு கேளாக் காதினராய் இன்றுவரை உள்ளது. இந்த ஆட்சியாளர்கள் செய்யும் அக்கிரமங்களை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியது மக்களின் தலைவிதியாக உள்ளது.

    இனியாவது, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப்பொருட்கள் நடமாட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவர, திறமையான காவல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி, இரும்புக்கரம் கொண்டு போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×