என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வலுவான புதிய அணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி அதிரடி திட்டம்
    X

    தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வலுவான புதிய அணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி அதிரடி திட்டம்

    • தமிழக தேர்தல் களத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது.
    • 2 சிறுபான்மையின கட்சிகளுடன் அ.தி.மு.க. சார்பில் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட அ.தி.மு.க. இனி எப்போதும் அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் அ.தி.மு.க. தலைமையில் தோழமை கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

    இதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி அதிரடியாக திட்டம் தீட்டியுள்ளார். பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி இருப்பதை தொடர்ந்து சிறுபான்மை ஓட்டுகளை கவரும் வகையில் காய் நகர்த்த எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்திருப்பதாக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கடந்த பாராளுமன்ற தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது.

    2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. ஆளும் கட்சியான தி.மு.க.விடம் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே அ.தி.மு.க. தோல்வி அடைந்திருந்தது.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த அரசியல் நோக்கர்கள், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதாலேயே அ.தி.மு.க. தோல்வியை தழுவி இருப்பதாக தெரிவித்திருந்தனர். இதனை கருத்தில் கொண்டே தற்போது பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறி இருக்கிறது.

    தமிழக தேர்தல் களத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த அணிக்கு எதிராக வலுவான புதிய கூட்டணியை அமைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும் என்பதால் அதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி வேகப்படுத்தி உள்ளார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.மு.க. கட்சிகளை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் இந்த கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளன.

    இந்த கட்சிகளுடன் மேலும் பல புதிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பதற்கு அ.தி.மு.க. தனி ஆவர்த்தனம் மேற்கொண்டு வருகிறது.

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்கிற முடிவில் உறுதியாக இருப்பதாக அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டி சிறுபான்மை கட்சிகள் சிலவற்றையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் மூலம் சிறுபான்மையினரின் ஓட்டுகளை கணிசமாக பெற்று பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற முடியும் என்பதே அ.தி.மு.க.வின் கணக்காக உள்ளது. அதற்கேற்ப சிறுபான்மை கட்சிகள் சிலவற்றுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமையப் போகும் புதிய கூட்டணி வலுவானதாக இருக்கும். சிறுபான்மையினரின் ஓட்டுகளையும் பெற்று அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதுதொடர்பாக 2 சிறுபான்மையின கட்சிகளுடன் அ.தி.மு.க. சார்பில் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதில் இறுதி உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் அ.தி.மு.க.வின் கூட்டணி ரகசிய பேச்சுகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

    Next Story
    ×