search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிறிஸ்தவ மாநாட்டில் குட்டிக்கதை கூறி தி.மு.க. மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு
    X

    கிறிஸ்தவ மாநாட்டில் குட்டிக்கதை கூறி தி.மு.க. மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு

    • அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களையும் முடக்கியுள்ளனர்.
    • கிறிஸ்தவ மக்களின் புனித தலமான ஜெருசலேம் செல்ல அ.தி.மு.க அரசில் நிதியுதவி அளிக்கப்பட்டது.

    கருமத்தம்பட்டி:

    கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு 10 அடி உயர மாலை, கிரேன் மூலம் போடப்பட்டது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என்ற விருதும் வழங்கப்பட்டது.

    விழாவில் எடப்பாடி பழனிசாமி ஒரு குட்டிக்கதையை கூறி தனது பேச்சை ஆரம்பித்தார். அந்த குட்டிக்கதையில், ஒரு விவசாயிக்கு 2 மகன்கள். இதில் மூத்த மகன் தந்திரசாலி, தீயவன். இளைய மகன் அப்பாவி நல்லவன்.

    2 பேரையும் விவசாயி, தினமும் தனக்கு சொந்தமான வயலுக்கு சென்று விவசாயம் பார்க்க அனுப்பினார். இளைய மகனான அப்பாவி, தனது தந்தை சொல்லுக்கு மதிப்பளித்து, தினமும் வயலில் விவசாயம் பார்த்தார்.

    மூத்த மகன் தந்திரிசாலி அல்லவா அவன் தனது தம்பியிடம் எனக்கு உடல்நலம் சரியில்லை. எனது வேலையும் சேர்த்து பார்த்து விடு என அன்போடு கூறி விட்டு, தீய செயல்களை செய்து பொழுதை கழிப்பார். அப்பாவியான தம்பி, அண்ணனின் வேலையையும் சேர்த்து பார்த்தார்.

    ஆனால் வீட்டிற்கு வரும்போது மட்டும் மூத்தவன், ஏதோ வயலில் பகல் முழுவதும் வேலை பார்த்த மாதிரி, உடம்பில் சேறும், சகதியுமாக வந்தான். இளையவன் குளித்துவிட்டு வந்தார். இதனால் விவசாயிக்கு தனது மூத்த மகன் தான் வேலை பார்க்கிறார். இளைய மகன் வேலை பார்க்கவில்லை என நினைத்துக்கொண்டு, மூத்த மகனுக்கு பண்டிகை காலங்களில் செல்வங்களை அள்ளி அள்ளி கொடுப்பார். இளைய மகனுக்கு கிள்ளி கொடுப்பார்.

    ஆனால் தந்தை திட்டுவதையோ, தனக்கு எதுவும் கொடுக்காததையோ நினைத்து இளைய மகன் வருத்தப்படவில்லை. தன்னை தந்தை ஒரு நாள் புரிந்து கொள்வார் என்று, தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்து வந்தார்.

    ஒருநாள் இளைய மகனுக்கு விபத்து ஏற்பட அவரால் வயலில் வேலை பார்க்க முடியவில்லை. மூத்த மகன் விவசாயம் பார்த்து தருவார் என விவசாயி நினைத்தார். ஆனால் மூத்த மகன் தான் வயல் பக்கமே போனதில்லையே அவருக்கு எப்படி விவசாயம் செய்வது என்றே தெரியவில்லை. இதனால் அந்த வருடத்தில் விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது.

    அப்போது தான் விவசாயிக்கு மூத்த மகன் சோம்பேறி என்பதும், இளைய மகன் தான் இதுவரை வேலை பார்த்து தனது குடும்பத்தை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அதன்பின்னர் இளைய மகனின் அதிகமான அன்பு காண்பித்ததுடன், மூத்த மகனை திருத்தவும் செய்தார்.

    இந்த கதையை எதுக்கு சொல்கிறேன் என்றால், தற்போது தமிழகத்தில் நடக்கிற அரசியலிலும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. ஒருவர் உழைப்பால் மற்றவர்கள் வாழவும், மற்றவர் முதுகில் ஏறி சவாரி செய்யவும் பலர் நினைக்கின்றனர் என கூறி தனது குட்டிக்கதையை முடித்தார்.

    நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளிவீசி மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சியை பிடித்தது. ஆனால் சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கின்றனர். மின் கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிலைகுலைந்துள்ளன.

    அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களையும் முடக்கியுள்ளனர்.

    கிறிஸ்தவ மக்களின் புனித தலமான ஜெருசலேம் செல்ல அ.தி.மு.க அரசில் நிதியுதவி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2½ ஆண்டுகளாக ஒரு கிறிஸ்தவரையாவது ஜெருசலேம் புனித பயணத்துக்கு அனுப்பி உள்ளனரா? சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்வதாக பொய்வேடமிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். சிறுபான்மை மக்களின் கேடயமாகவும், பாதுகாப்பு அரணாகவும் அ.தி.மு.க என்றென்றும் இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.கவில் இணையும் விழாவில் பங்கேற்றார்.

    Next Story
    ×