என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. 4-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- விவசாய விளைநிலங்களை ‘சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்’ என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான செயலில் தி.மு.க. அரசு இறங்கி உள்ளது.
- அனக்காவூர் கிழக்கு ஒன்றியம், மேல்மா கூட்டு ரோடு என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
எதிர்க்கட்சியாக இருக்கின்றபோது அரசியல் காரணங்களுக்காகவும், வாக்குகளைக் கவர வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், அம்மா அரசு செயல்படுத்திய பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே தனது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கின்றபோது என்னென்ன காரணங்களுக்காக ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தியதோ, அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, தற்போது இந்த அரசு மக்கள் விரோத அரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளைநிலங்களை 'சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்' என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான செயலில் தி.மு.க. அரசு இறங்கி உள்ளது. இச்செயல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் செயலில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும்; விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முடிவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க. திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், 4.10.2023 (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில், அனக்காவூர் கிழக்கு ஒன்றியம், மேல்மா கூட்டு ரோடு என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலும்; திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தூசி மோகன், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான பாபு முருகவேல் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.
விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கும்; விவசாய விரோத தி.மு.க. அரசைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






