search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நகைக்கடை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன்
    X

    நகைக்கடை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன்

    • கவர்ச்சிகரமான திட்டங்களை பார்த்த பொதுமக்கள், அந்த நகைக்கடையின் திட்டங்களில் சேர்ந்தனர்.
    • ரூ.100 கோடி அளவில் நடைபெற்ற மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சென்னை:

    திருச்சியை தலைமையிடமாக கொண்டு பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டது. இந்த கடையின் கிளைகள் மதுரை, நாகர்கோவில், புதுச்சேரி, சென்னை உள்பட 8 இடங்களில் இருந்தன. இந்த கடை நிர்வாகத்தினர், பல்வேறு புதிய நகை சேமிப்பு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தனர்.

    கவர்ச்சிகரமான இந்த திட்டங்களை பார்த்த பொதுமக்கள், அந்த நகைக்கடையின் திட்டங்களில் சேர்ந்தனர். ஆனால், பலரது சீட்டுகள் முதிர்வு அடைந்துவிட்ட நிலையில், அதற்குரிய பணத்தையும், நகையையும் வழங்காமல் அந்த கடை நிர்வாகம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. ரூ.100 கோடி அளவில் நடைபெற்ற இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அந்த கடைக்கு சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதோடு பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகிய 2 பேரையும் தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்ததாக பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்தது.

    இந்த நிலையில், பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையினர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் கணக்கில் வராத 11.60 கிலோ எடையுள்ள தங்கநகைகளும், 23.70 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தது.

    இதன் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

    அதில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரகாஷ் ராஜூ ஓரிரு நாட்களில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×