search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை, தென்காசியில் தொடர்மழை- சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 17 அடி உயர்ந்தது
    X

    நெல்லை, தென்காசியில் தொடர்மழை- சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 17 அடி உயர்ந்தது

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.
    • கன்னடியன் கால்வாய் பகுதியில் 16 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 10.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம், தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் அணை பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி வருகிறது.

    தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 57 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 66 அடியானது. இதேபோல் 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் நேற்றில் இருந்து 8 அடி உயர்ந்து இன்று 45 அடியானது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நேற்று 40 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 10 அடி உயர்ந்து 50 அடியானது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 32 அடியில் நீடிக்கிறது.

    மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரையிலும் பலத்த மழை பெய்தது. இன்றும் காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அடவி நயினாரில் 70 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 42.6 மில்லிமீட்டரும், ஆய்க்குடியில் 21 மில்லி மீட்டரும், கடனாவில் 22 மில்லிமீட்டரும், ராமநதியில் 20.3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, ராதாபுரம், அம்பை, நாங்கு நேரி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வள்ளியூரில் சாரல் பெய்தது. அதிகபட்சமாக அம்பையில் 18.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 16 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 10.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அங்கு நேற்று 48 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், இன்று 5 அடி உயர்ந்து காலை நிலவரப்படி 53.50 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 3,882 கனஅடிநீர் வந்து கொண்டிருப்பதால் மேலும் நீர்மட்டம் உயரும்.

    சேர்வலாறு அணையில் நேற்று 73.46 அடி நீர் இருந்த நிலையில், தொடர்மழையால் ஒரே நாளில் 17 அடி உயர்ந்து 90.19 அடியை எட்டியுள்ளது. அங்கு 43 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 44.80 அடியாக நீடிக்கிறது.

    Next Story
    ×