search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் விடிய விடிய மழை: சாலைகள், தெருக்கள் வெள்ளக்காடானது- வாகன ஓட்டிகள் கடும் அவதி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னையில் விடிய விடிய மழை: சாலைகள், தெருக்கள் வெள்ளக்காடானது- வாகன ஓட்டிகள் கடும் அவதி

    • சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை அதிகமாக இருந்தது.
    • ஒருநாள் மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு ஜூன் மாதத்திலும் கடுமையாக இருந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை அதிகமாக இருந்தது. மக்கள் பகல் வேளையில் மட்டுமின்றி இரவிலும் சிரமப்பட்டனர். வெயிலின் உஷ்ணம் இரவில் கடும் புழுக்கத்தை தந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கியது.

    பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் வெயிலின் தாக்கத்தில் அவதிபட்டு வந்த நிலையில் ரம்மியமான சூழல் இதமாக இருந்தது. 2 மாதத்திற்கு பிறகு மப்பும் மந்தாரமுமான சூழலுடன் மழையும் பெய்ததால் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. லேசான காற்றுடன் பெய்த மழை நள்ளிரவில் அதிகரித்து நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. காற்றுடன் பெய்ததால் ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது.

    தொடர்ந்து விடிய விடிய மழை பெய்ததால் சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளம் போல் திரண்டு ஓடியது. ஒரு சில நேரங்களில் லேசான தூறலாகவும், சில சமயங்களில் கனமழையாகவும் பெய்தது. வானம் இருண்டு காணப்பட்டது. பயங்கர இடி சத்தத்துடன் நகரின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், வேப்பேரி, கோயம்பேடு, கிண்டி கத்திபாரா, ஓ.எம்.ஆர்., திருமங்கலம், தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    கிரின்வேஸ் சாலை சந்திப்பு, நீலாங்கரை பகுதியில் பெய்த மழையால் குளம்போல் தண்ணீர் தேங்கியது. பெருங்குடி உலக வர்த்தக மையம் அருகில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது.

    புதிதாக போடப்பட்ட தார் சாலையில் பல இடங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றன.

    ஒருநாள் மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பெரும்பாலான இடங்களில் தற்போது தேங்கவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் தேங்கி நின்றன. சாலைகளில் மட்டுமின்றி தெருக்களிலும் மழைநீர் தேங்கி நின்றதால் வெள்ளம் போல் காட்சி அளித்தது.

    நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை சென்னையில் 207 இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதாக மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தன. 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது மண்டலம் வாரியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அதனை சரி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தண்ணீர் தேங்கி நின்ற பகுதிக்கு மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் சென்று அதனை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    44 இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது. 163 இடங்களில் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இதே போல 23 இடங்களில் மரங்கள், கிளைகள் சரிந்து விழுந்தன. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மரங்கள் வெட்டி அகற்றும் பணியும் முழு வீச்சில் நடந்தது. போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மயிலாப்பூர் முண்டக்கன்னி அம்மன் கோவில் தெரு, தி.நகர் உள்ளிட்ட பல இடங்களில் விழுந்த மரங்களை அகற்றினர்.

    மாநகராட்சி ஊழியர்கள் மரம் வெட்டும் எந்திரங்களுடன் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.

    சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்பட்டன. பகலிலேயே வாகன ஓட்டிகள் விளக்குகளை பயன்படுத்தி சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலுவலகங்களுக்கு செல்லக்கூடியவர்கள் கொட்டும் மழையில் நனைந்து சென்றனர்.

    கனமழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. அரசு பஸ்களில் குறைந்த அளவில் மக்கள் பயணம் செய்தனர். ஷேர் ஆட்டோக்கள் அதிகளவில் ஓடின.

    சென்னையை போலவே புறநகர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. தாம்பரம், மதுரவாயல், புழல், வண்ட லூர், பூந்தமல்லி, செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது.

    கோடை வெயிலின் தாக்கத்தால் 3 மாதங்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த மழை பெரும் ஆறுதலாக இருந்தது. வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்தது போல் மக்கள் மனமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

    Next Story
    ×