search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மலை கிராமங்களில் சாலை அமைப்பது குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு
    X

    அல்லேரி மலை கிராமத்தில் சாலை அமைப்பது குறித்து வரைபடத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்த காட்சி.

    மலை கிராமங்களில் சாலை அமைப்பது குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு

    • சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.
    • குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் சுமார் 120-க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்கள் உள்ளன.

    சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த மலை பகுதிகளுக்கு இதுநாள் வரை சாலை அமைக்கப்படவில்லை.

    மலை உச்சியில் வசிக்கும் இந்த மக்கள் தங்களது தேவைகளை சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒடுக்கத்தூர் மற்றும் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கு சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

    அதேபோல் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு, தலை மீது சுமந்தபடியே மீண்டும் மலை கிராமத்துக்கு நடைபயணமாக செல்கின்றனர்.

    சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். யாருக்கேனும் திடீரென உடல்நிலை சரியில்லாதபோது மலைவாசிகள் டோலி கட்டி, அதில் நோயாளியை படுக்க வைத்து தோள் மீது சுமந்தபடியே ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணிகளையும் டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம்.

    இந்த நிலையில் பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டது அல்லேரி அடுத்த அத்திமரத்து கொல்லை. இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த விஜி-பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை பாம்பு கடித்தது.

    சாலை வசதி இல்லாததால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை குழந்தை பரிதாபமாக இறந்தது.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

    மலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் உடல் கொண்டுவரப்பட்டது அங்கிருந்து பெற்றோர்களை இறக்கி விட்டனர் குழந்தையின் தாய் கண்ணீர் மல்க தனது குழந்தையின் உடலை 10 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்றார். இது பெரும் பரபரப்பை பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.

    அல்லேரி, அத்திமரத்து கொல்லை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் அத்திமரத்து கொல்லை மலை கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அணைக்கட்டு அருகே உள்ள மலை கிராமங்களுக்கு விரைவில் சாலை வசதி மற்றும் ஆரம்ப துணை சுகாதார மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின்போது சப்-கலெக்டர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×