என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் பயன்: குழந்தைகளின் பெற்றோரிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர்
    X

    "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தில் பயன்: குழந்தைகளின் பெற்றோரிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர்

    • ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
    • அனைத்து குழந்தைகளின் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கும் வகையில் "ஏற்றமிகு ஏழு திட்டங்கள்" கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் மூலம் பயன்பெற்ற வருண் (வயது 4), நுசாய்பா (வயது 2) மற்றும் சாய்திரன் (2½ வயது) ஆகிய குழந்தைகளின் பெற்றோர்களிடம் அக்குழந்தைகளின் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

    மேலும், இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாம்களின்போது இருதயத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்ட ஹர்ஷித் (வயது 2) மற்றும் தேஜாஸ்ரீ (2 வயது 8 மாதம்) ஆகிய குழந்தைகளின் பெற்றோர்களிடம் அக்குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டறிந்து, நலம் விசாரித்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்குழந்தைகளின் பெற்றோர்களிடம் சத்துப் பெட்டகம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை வழங்கினார்.

    ஆரோக்கியமான குழந்தைகளே, நாட்டின் வளமான எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.05.2022 அன்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், மாநில அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம் என்றும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் செயல்படுத்திட அரசு முடிவெடுத்துள்ளது என்றும் அறிவித்தார்.

    இத்திட்டமானது, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து, 6 வயத்திற்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

    'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் கீழ், குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.5.2022 அன்று தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் கீழ், 6 வயது வரையுள்ள மிதமான மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 9.3 லட்சம் குழந்தைகள் ஆர்.பி.எஸ்.கே. குழுவினரால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டார்கள். அதில் 43,200 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை உட்பட வெவ்வேறு மருத்துவச் சிகிச்சைகள் மாவட்ட ஆரம்ப சிகிச்சை மையங்களில் அளிக்கப்பட்டது.

    6 மாதம் முதல் 6 வயதுடைய கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு உண்பதற்கு தயாராக உள்ள சிகிச்சை உணவு 8 வாரங்களுக்கு அளிக்க ரூபாய் 18.68 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. அதேபோன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினால் ஊட்டச்சத்து குறைபாடுடைய 6 மாதக் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ரூபாய் 8.68 கோடி செலவில் சத்துப்பெட்டகம் வழங்கவும் ஆணையிடப்பட்டது.

    இத்திட்டத்தை சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் 28.2.2023 அன்று நடை பெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

    6 மாதம் முதல் 6 வயதுடைய கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 92,015 குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை உணவு அளிக்கப்பட்டதில் 61,788 (66.6 சத வீதம்) குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதே போன்று 6 மாதக்கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 14,901 குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்கள் பிறப்பு கூடுதல் சத்து உட்கொண்டதினால் 13,319 (89.4 சதவீதம்) குழந்தைகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் காணப்பட்டு உள்ளது.

    அனைத்துக் குழந்தைகளின் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் வளர்ச்சியில் முன்னேற்றத்தினை கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் குழந்தையின் வளர்ச்சியில் குறிப்பாக முதல் 6 மாதத்தில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தினைப் பற்றி மிகுந்த விழிப்புணர்வினை உருவாக்கியுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் பிறவியிலேயே கண்டறியப்பட்ட இருதய நோய், பிறவியிலேயே கண்டறியப்பட்ட மூளை வளர்ச்சி குறைபாடு, பிறவி பார்வை குறைபாடு, பிறவி காது கேளாமை, பிறவி கால் ஊனம் போன்ற பிறவி குறைபாடுகளை உடைய 3038 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்பொழுது அவர்கள் நலமாக உள்ளனர்.

    நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குனர் ஜெ. யு சந்திரகலா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×