search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ் எழுத்துக்களால் உருவான 25 அடி உயர பிரமாண்ட திருவள்ளுவர் சிலை: முதலமைச்சர் திறந்து வைத்தார்
    X

    தமிழ் எழுத்துக்களால் உருவான 25 அடி உயர பிரமாண்ட திருவள்ளுவர் சிலை: முதலமைச்சர் திறந்து வைத்தார்

    • கோவை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது.
    • நூலகத்தில் மொத்தம் 10 ஆயிரம் புத்தகங்கள் வைக்க முடியும். ஒரே நேரத்தில் 80 பேர் அமர்ந்து வாசிக்க ஏற்றவாறு இருக்கைகள் உள்ளன.

    குனியமுத்தூர்:

    கோவை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை-பொள்ளாச்சி சாலையில் குறிச்சி கிழக்கு கரைப்பகுதியில் தமிழர் மரபை பிரதிபலிக்கும் வகையில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பரதநாட்டியம் ஆடும் பெண், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள், சிலம்பம் ஆடும் வீரர்கள் என தலா 15 அடி உயரத்தில் 4 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலைகள் அனைத்தும் பைர் பொருட்களால் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகளின் அருகே திறந்தவெளி அரங்கம் போல பொதுமக்கள் நின்று பார்க்கும் வகையில் செல்பி பாய்ண்ட் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதில் ஜல்லிக்கட்டு காளை, பொங்கல் பானை, தலையாட்டி பொம்மை, நடனமாடும் பெண், ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது, சக்கரம் ஆகிய கட்டமைப்புகளும் அதில் பொருத்தப்பட்டுள்ளன.

    இதன் மறுபுறம் உள்ள குறிச்சி சின்னக்குளத்தில், உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து ஆகிய 247 தமிழ் எழுத்துகளை கொண்டு பிரமாண்டமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    25 அடி உயரத்தில் 25 அடி நீளம் 15 அடி அகலத்தில் இந்த சிலையானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    இந்நிலையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று இதனை திறந்து வைத்தார்.

    இதேபோல் கோவை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையம் 48 சென்ட் பரப்பளவு கொண்ட இடத்தில் 7,800 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

    தமிழ் எழுத்துக்களால் உருவான திருவள்ளுவர் சிலை மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி.

    தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்டதாகும். இந்த நூலகத்தில் மொத்தம் 10 ஆயிரம் புத்தகங்கள் வைக்க முடியும். ஒரே நேரத்தில் 80 பேர் அமர்ந்து வாசிக்க ஏற்றவாறு இருக்கைகள் உள்ளன.

    சிறுவர், சிறுமிகள், மாணவ-மாணவிகளுக்கு ஏற்ற நூல்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறுபவர்கள் படிக்க தேவையான நூல்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நூலகத்தையும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    அதேபோல கோவை பெரியகுளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள அனுபவ மையம் என்ற பொழுது போக்கு கட்டமைப்பையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    Next Story
    ×