search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை: சிஐடியு சவுந்தரராஜன்
    X

    அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை: சிஐடியு சவுந்தரராஜன்

    • பழைய ஓய்வூதியம் உள்பட எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.
    • சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மற்ற ஊழியர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்கி வருகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பெருமளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ஆனாலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிவித்தார்.

    இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சவுந்தர் ராஜனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரினோம். ஆனால் அரசு அதை கண்டு கொள்ளவில்லை. அதனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எவ்வித பலனும் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள்.

    நியாயமாக எங்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து இயன்றதை இப்போது செய்து இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், மாறாக நிதிநிலைமையை காரணம் காட்டி எதையும் ஏற்க மறுப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் ஊடகங்களில் கூறுவது ஏமாற்று வேலை. அவர் பொதுமக்கள் மத்தியில் தங்கள் மீது தவறும் இல்லாதது போல காட்டிக் கொள்கிறார்.

    தொழிற்சங்கங்களுக்கு முறையான அழைப்பு கொடுக்க வேண்டும். மேலாண்மை இயக்குனர் அல்லது பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து போன் செய்து எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது தான் முறை. ஆனால் அதற்கு மாறாக ஊடகங்கள் மத்தியில் கூறுவது எங்களை அவமதிக்கும் செயலாக கருதுகிறோம்.

    வேலைநிறுத்தத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அரசு வெளியாட்களை வைத்து பஸ்களை இயக்குகிறது. இதுவும் ஏமாற்று வேலை தான்.

    அதிக ஊழியர்கள் பணிக்கு வந்ததாக அமைச்சரை அதிகாரிகள் ஏமாற்றுகிறார்கள். சென்னையில் ஒரே பஸ், பல வழித்தடங்களில் இயக்கப்படும் நிலை தான் உள்ளது. 106 சதவீதம் பஸ்கள் ஓடுவதாக கூறுவது ஏமாற்று வேலை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×