search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தலை புறக்கணிப்பதாக கூறும் மக்களிடம் பேச்சுவார்த்தை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
    X

    தேர்தலை புறக்கணிப்பதாக கூறும் மக்களிடம் பேச்சுவார்த்தை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

    • பேச்சுவார்த்தையையும் மீறி தேர்தலை புறக்கணித்தால், ஜனநாயக நாடு என்பதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது.
    • தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    தாம்பரத்தில் நெல்லை ரெயிலில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

    அதுபற்றிய விசாரணை, வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தகவல்கள் மட்டுமே என்னிடம் கூறப்பட்டது. வருமான வரித்துறையும், தேர்தல் செலவின பார்வையாளரும் சேர்ந்து சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. அதுபற்றிய தகவல்களை அவர்கள் இந்திய தேர்தல் கமிஷனிடம் நேரடியாக தெரிவிப்பார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் (பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக) ஒரு பகுதியில் உள்ள சிலர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர். அவர்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்துவார். வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துச் சொல்லி, அவர்களை கண்டிப்பாக வாக்களிக்க வலியுறுத்தப்படும். பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடிந்தால் அதையும் செய்வார்கள். பேச்சுவார்த்தையையும் மீறி தேர்தலை புறக்கணித்தால், ஜனநாயக நாடு என்பதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது.

    'சுகி, சுமோட்டா' மற்றும் பல இணையதளங்களிலும் தேர்தல் கமிஷனின் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம். அனுமதி பெறாமல் விளம்பரம் செய்தால் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறி வருகிறார்கள். இதையொட்டி தமிழகத்திற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று, அங்குள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

    தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியபடி நடக்காமல் பணியில் மெத்தனமாக இருக்கும் பறக்கும் படை அதிகாரிகள் சிலர் மீது இடைக்கால பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேர்தல் முடிந்த பிறகு பணியில் தொடருவது குறித்து, இந்திய தேர்தல் கமிஷன் அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவு எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×