search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு- விநாடிக்கு 1200 கன அடிநீர் வெளியேற்றம்
    X

    சேத்தியாத்தோப்பு அணைக்கட்டின் 4 மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுவதை படத்தில் காணலாம்.

    சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு- விநாடிக்கு 1200 கன அடிநீர் வெளியேற்றம்

    • ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியில் 46 கன அடியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக எட்டியது.
    • வெள்ளாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறினார்.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீ முஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி, தொழுதூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவு 12 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது.

    விடியற்காலை 6 மணிவரை லேசான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 17 செ.மீ. மழை பதிவாகியது. இதனால் வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு தனது முழுக் கொள்ளளவான 7.5 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிற்கு நீர் வந்த வண்ணம் உள்ளதால் பொதுப்பணித் துறை நீர்ப்பாசனப் பிரிவினர் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்தனர். அணைக்கட்டில் 20 மதகுகள் உள்ளன. இதில் 4 மதகுகளை மட்டும் திறந்து விநாடிக்கு 600 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    மேலும், கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது வீராணம் ஏரியாகும். 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி 5 கிலோ மீட்டர் அகலம் உடையது. ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியில் 46 கன அடியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக எட்டியது.

    தற்போது பெய்த மழையில் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரியின் வி.என்.எஸ்.எஸ். மதகு, பாழ் வாய்க்கால்கள் மூலம் தலா 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு குமார உடைப்பு வழியாகவும் 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் அனைத்தும் பல்வேறு வாய்க் கால்கள் வழியாக பரங்கிப் பேட்டைக்கு சென்று வங்கக் கடலில் கலக்கிறது.

    நீர் வரத்தை பொறுத்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரியில் இருந்து வெளி யேற்றப்படும் நீரின் அளவு கூடுதலாவதற்கு வாய்ப்பு உள்ளதாக செயற்பொறியாளர் அடைக்காப்பான் கூறினார். மேலும், வெள்ளாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறினார்.

    Next Story
    ×