என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வடகிழக்கு பருவமழையின்போது செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடி மட்டும் தண்ணீரை தேக்கி வைக்க முடிவு
- செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து குறைவாக இருக்கும்போது சாதாரண நாட்களில் 23 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கப்படும்.
- அனகாபுத்தூர் மற்றும் திருநீர்மலை இடையே 120 மீட்டர் நீளத்துக்கு ஆற்றில் அகலப்படுத்தும் பணி நடந்தது.
பூந்தமல்லி:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கன. அடி ஆகும். தற்போது 2,804 மி.கன அடி தண்ணீர் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 20 அடிக்கு தண்ணீர் இருக்கிறது.
வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியில் 23 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் 22 அடிக்கு மட்டும் ஏரியில் தண்ணீர் தேக்கி வைத்து உபரி நீரை உடனடியாக வெளியேற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது உபரி நீர் வெளியேற்றப்பட்டு அடையாறு ஆற்றில் கலந்து கடலில் சேறும்.
அடையாறு ஆற்றில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் முழுவதும் வீணாகி வருகிறது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து குறைவாக இருக்கும்போது சாதாரண நாட்களில் 23 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கப்படும். ஏற்கனவே தற்போது ஏரியில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. பருவமழை தீவிரம் அடையும் போது வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் ஏரியில் நீர் இருப்பை 22 அடியில் மட்டும் சேமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அடையாறு ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும்போது 42 கி.மீட்டர் தூரத்தில் சில இடங்கள் குறுகலாக இருப்பதால் இந்த இடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வந்தன.
இதைத்தொடர்ந்து அனகாபுத்தூர் மற்றும் திருநீர்மலை இடையே 120 மீட்டர் நீளத்துக்கு ஆற்றில் அகலப்படுத்தும் பணி நடந்தது. இதேபோல் மணப்பாக்கம் பாலம், குன்றத்தூர் பகுதியிலும் விரிவாக்கப் பணி நடைபெற்றது. ஆற்றின் கரைகளை விரிவாக்கும் பணி 60 சதவீதம் முடிந்துள்ளது.
மணப்பாக்கம் பாலம் அருகே தடுப்புச்சுவர் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. இது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரை வெளியேற்றும்போது உதவும்.
கடந்த 2015-16-ம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 922.67 மில்லியன் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் பின்னர் 2020-21-ம் ஆண்டில் 1725.93 மில்லியன் கனஅடியும், 2021-22-ம் ஆண்டில் 3,998.94 மில்லியன் கனஅடியும் உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






